தங்கம் விலை ஒரு வாரமாக குறையுது ஓகே.. ஆனால் இதே டிரெண்ட் தொடருமா? ஆனந்த் சீனிவாசன் நறுக் விளக்கம்

post-img
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் சிலருக்குத் தங்கம் விலை இன்னும் குறையுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதற்கான பதிலையும் தங்கம் ஏன் குறைகிறது என்பதற்கான விளக்கத்தையும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த டிச. 11ம் தேதி 22 கேரட் தங்கம் விலை கடைசியாகக் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து சரிந்தே வருகிறது. இடையில் கடந்த டிச. 17ம் தேதி மட்டுமே தங்கம் விலை 10 ரூபாய் மட்டும் அதிகரித்து இருந்தது. ஒட்டுமொத்தமாகக் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சுமார் ரூ. 150 வரை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.7040க்கு விற்பனையானது. அதேபோல 24 கேரட் தங்கமும் ரூ.7680க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை திடீரென இந்தளவுக்குக் குறைந்துள்ளதால் மீண்டும் மக்கள் மெல்லத் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் சிலருக்குத் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுப்புகிறார்கள். இதற்கான பதிலைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். தங்கம் விலை எதற்காகக் குறைகிறது என்பதை விளக்கிய அவர், சர்வதேச சந்தையில் பெரியளவில் குறைந்தாலும் இந்தியாவில் அதே அளவுக்குத் தங்கம் ஏன் குறையவில்லை என்பதற்கான காரணத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் கூறுகையில், "கடந்த ஒரு வாரத்தில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 200 வரை குறைந்துள்ளது. அதேபோல 22 கேரட் தங்கமும் ஒரு வாரத்தில் ரூ. 150 வரை குறைந்துள்ளது. ஆனால், நாம் ஏற்கனவே தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து வைத்திருந்ததால், இங்குக் குறைவாகவே தங்கம் விலை இருந்தது. அதாவது சர்வதேச அளவில் தங்கம் விலை ரூ.10ஆக இருந்தது என்றால் நமது நாட்டில் ரூ. 9 அல்லது ரூ. 9.20 என்றே வர்த்தகமானது. அதுவே தொடர்கிறது. அமெரிக்காவில் மத்திய வங்கி சிறியளவிலேயே அளவே வட்டியைக் குறைத்துள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளது. அதேநேரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும் கூட, இங்கே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்கிறது. மத்திய ரிசரவ் வங்கி டாலரை பயங்கரமாக ஷார்ட் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். மொத்த கையிருப்பில் சுமார் 15- 17% வரையிலான தொகையை ஷார்ட் அடித்துள்ளனர். இவை எல்லாம் நானாகச் சொல்லவில்லை. பல்வேறு பிஸ்னஸ் நாளேடுகள் இதைக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் ரூபாய் மதிப்பு ரூ.85ஐ தாண்டிவிட்டது. ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் தனது டாலர் இருப்பை விற்கிறதோ.. அப்போது மட்டுமே ரூபாய் மதிப்பு சற்று உயர்கிறது. திங்கள்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து தங்கள் முதலீட்டை விற்று வருகிறார்கள். இதனால் திங்கள்கிழமை மீண்டும் ரூபாய் மதிப்பு சரியலாம். இதன் காரணமாகவே பங்குச்சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது" என்றார். மேலும், தற்போது என்ன தான் தங்கம் விலை குறைந்தால் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை உச்சம் தொடும் என்றே ஆனந்த் சீனிவாசன் முந்தைய வீடியோக்களில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தங்கம் விலை இதுபோல குறையும் போதெல்லாம் வாங்குவதே சரியானதாக இருக்கும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Related Post