கடலூர்: கடலூரில் நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் வாயில்லா ஜீவனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று மீனவர்கள் போராடி வருகிறார்கள். அத்துடன், மீன்வள துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 30ம்தேதி இரவு ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் கரையை கடந்து சென்றது.. புயல் கரையை கடக்கும்போது, அதிகனமழை கொட்டியது.. இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன..
தென்பெண்ணை: கனமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது.. இந்த நேரத்தில், கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த கேசவன், கண்ணையன், குணா, மனோகர் உள்ளிட்ட 7 பேரின் 60க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் தேவனாம்பட்டினம் முகத்துவார பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன.
அப்போது கெடிலம் ஆற்றின் நீர் கடலில் வடிவதற்காக வெட்டப்பட்ட முகத்துவாரத்தில் மாடுகள் இறங்கியிருக்கின்றன.. ஆனால் நீரிடன் வேகம் அதிகமாக இருந்ததால், மாடுகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.. இதனால், 32 மாடுகள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன... தாழங்குடி முகத்துவாரத்தில் மேய்ந்துகொண்டிருந்த 32 எருமை மாடுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவைகளில் பல மாடுகள் உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.
எருமை மாடு: இப்படிப்பட்ட சூழலில்தான், தாழங்குடா பகுதியிலிருந்து 9 நாட்டிகல் மைல் தூரத்தில், எருமை மாடு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக மீனவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதை கேள்விப்பட்டதுமே, மீனவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள்.. கடலில் மாடு தத்தளிப்பதைக் கண்டு கலங்கினார்கள்.. உடனடியாக அதற்கு குடிப்பதற்காக தண்ணீர் வழங்கியிருக்கிறார்கள்..
ஆனால் பசுமாட்டை ஏற்றி கொண்டு வரும் அளவுக்கு பெரிய படகு இல்லையாம்.. தற்சமயமுள்ள படகில் மாட்டை ஏற்றினாலும், அது பாரம் தாங்காமல் உடைந்துவிடும் என்பதால், மாட்டை காப்பாற்ற முடியாமல், கடந்த 7 நாட்களாகவே மீனவர்கள் தவித்து வருவதாக கூறுகிறார்கள்.. ஆனால், மற்ற 32 எருமை மாடுகளும் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
தவிக்கும் மீனவர்கள்: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோதுதான், நடுக்கடலில் எருமை மாட்டை பார்த்துள்ளனர். இந்த ஒரு எருமை மாட்டினையாவது உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில்தான், தங்கள் படகுடன் சென்றுள்ளனர். ஆனால், பெரிய அளவிலான படகு இல்லாததால் மீனவர்கள் அந்த மாட்டை மீட்க முடியாமல் திரும்ப வந்துள்ளனர். பிறகு மீனவர்கள் மாட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
கடலில் எருமை மாடு தத்தளித்து வரும் வீடியோ காட்சிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.. நடுக்கடலில் தத்தளித்து வரும் அந்த எருமை மாட்டை மீட்க மீன்வள துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
Weather Data Source: Wettervorhersage 21 tage