சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தவெக தொண்டர்கள் சார்பாக விஜய்க்கு அளிக்கப்பட்ட வெள்ளி வேல் அவர் கைக்கு இன்னும் போகவில்லை என்றும் அதைக் கட்சி நிர்வாகியே வைத்துக் கொண்டார் என்றும் புகார் எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 27 விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய முதல் மாநில மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. அதில் பங்கேற்பதற்காகச் சென்ற அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஒரு தொண்டரை மாநாடு முடிந்து 10 நாட்கள் ஆகியும் காணவில்லை என விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர்.
மாநாட்டில் விஜய் பேசிய சில கருத்துகள் அரசியல் அரங்கத்தில் சர்ச்சையை ஒரு பக்கம் கிளப்பியிருந்தாலும் அவரது தொண்டர்களின் மரணம் பற்றிய விவாதங்களும் நடந்தன. உயிரிழந்தவர்களுக்கு மாநாட்டில் உரிய முறையில் அஞ்சலி செலுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்யப்பட்டன. மாநாடு முடிந்து 2 மாதங்களாகியும் முறையாகக் கட்சி நிர்வாகிகளை தவெக தலைமை இன்னும் நியமிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மத்தியில் இப்போதே கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. இந்நிலையில் மாநாடு முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது கட்சிக்குள் ஊழல் புகார் ஒன்று கிளம்பி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இடையே கடும் உட்கட்சி பூசல் உருவாகியுள்ளது. இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து ஒரு அணியினர் மற்றொரு அணியினை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக அறிவித்து நோட்டீஸ் விநியோகித்தனர். அதனால் சர்ச்சை மூண்டுள்ளது.
ராமநாதபுரம் தவெக உறுப்பினராக இருந்த வந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே அவர் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக தவெக மாவட்ட தலைவர் மலர்விழி இவரைக் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சொல்கிறார் நீக்கப்பட்ட பி.பி.ராஜா. அவர் கட்சிக்காக உழைத்த தன்னை காகிதம் போல் இன்று மலர்விழி தூக்கிப் போட்டுவிட்டார் என்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். ராஜா பேசுகையில், "மலர்விழியை மாவட்டத் தலைவராக நியமித்ததே அவரது கணவர்தான். அவர் அரசு ஊழியர். எனவே அவரால் கட்சி பணியில் நேரடியாக ஈடுபட முடியாது. மனைவியின் பின்னால் ஒளிந்து கொண்டு அவர் எங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார்.
விக்கிரவாண்டி மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தனது தலைமையிலான நபர்களே செய்தார்கள். ஆனால், என் பெயரை மறைத்துவிட்டனர். கட்சி சார்பாக நடந்த இணைப்பு விழாவுக்கு மூன்று வாகனங்களில் தொண்டர்களுடன் சென்றபோது ஒரு கோஷ்டியினர் தங்களைத் தொண்டி பாதி வழியிலேயே மறித்துச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.
அதன்பின்னர் கட்சி பொதுச்செயலாளரை புஸ்ஸி ஆனந்த்தைச் சந்தித்து முறையிட்டோம். அதற்கு ஆனந்த், 'மலர்விழி அணியை ஏற்றுக் கொண்டால் அவருடன் சேர்ந்து பயணி. அப்படி ஏற்கவில்லை என்றால், நிகழ்ச்சி பேனர்களில் என் படத்தைப் போடாமல் விஜய் படத்தை மட்டுமே போட்டு தனியே செயல்படு' என்று சொன்னார். எங்களை நீக்கும் அதிகாரம் தலைமைக்குத்தான் உண்டு. மாவட்டத் தலைவருக்கு இல்லை. நாங்கள் செய்த நற்பணிகளை எல்லாம் தலைவரின் கணவர் செய்ததைப் போலத் தலைமையிடம் காட்டிக் கொண்டு நல்ல பெயர் அவர் எடுத்து வருகிறார். நாங்கள் விஜய்க்குப் பரிசாக வெள்ளி வேல் கொடுத்தோம். அது அவரது கைக்குப் போகவே இல்லை" என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார் ராஜா.