எம்பிக்களை தள்ளிவிடுவதற்கு தான் ராகுல் காந்தி குங்ஃபூ கற்றாரா? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி

post-img
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக காங்கிரஸ் எம்பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பாஜக எம்பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்து அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டதாக அவர் குற்றம் சாட்டிய நிலையில், "எம்பிக்களை தாக்குவதற்காகத் தான் ராகுல் காந்தி குங்ஃபூ கற்றுக்கொண்டாரா?" என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கரை அவமதித்ததாக கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, விழுப்புரம், ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் திமுக, விசிக சார்பில் போராட்டம் நடந்தது. இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்திலும் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அம்பேத்கர் புகைப்படங்கள், அம்பேத்கரின் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக எம்பிக்களும் காங்கிரஸ் அம்பேத்கரை இழிவுபடுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என்று போராட்டம் செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் காங்கிரஸ் எம்பிக்கள் நுழைய முயன்றபோது பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பாஜக எம்பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் தான் நான் கிழே விழுந்ததாக பாஜக எம்பி பிரதாப் சாரங்கி தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் நான் நுழைய முயன்றபோது என்னை பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டு மிரட்டப் பார்த்தார்கள். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்து தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம். நடந்த காட்சிகள் இங்குள்ள கேமராக்களில் பதிவாகியிருக்கும். பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று பதில் அளித்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்பிக்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு பாஜக எம்பிக்களை காயப்படுத்தியதாக, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாஜக எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக காலையில் அவை கூடியதும், அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் அவை கூடியது. அப்போது மத்திய அமைச்சர்கள் ராகுல் காந்தி வேண்டும் என்றே தான் பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டினர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் ராகுல் காந்தி வேண்டும் என்றே தான் பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக கூறினார். மேலும் அவர் ராகுல் காந்தி இதற்காகத் தான் குங்ஃபூ கற்றுக்கொண்டாரா என்றும் கூறினார். கிரண் ரிஜிஜூ கூறுகையில், "ராகுல் காந்தி வேண்டும் என்றே பாஜக எம்பிக்களை கீழே தள்ளிவிட்டார். அவர் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியை தன் முன் உள்ள நபரை வைத்து தள்ளிவிட்டார். எம்பிக்களை தாக்குவதற்காகத் தான் அவர் குங்ஃபூ கற்றுக்கொண்டாரா? என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறினார். கர்நாடகாவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அங்கும், "அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷவை கண்டிக்கும் வகையில், காங்கிரஸ் எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அவர்களது இருக்கைகளில் எல்லாம் அம்பேத்கரின் புகைப்படங்களை வைத்து விட்டு சென்றனர்". இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Post