நான் கிறிஸ்தவன் என பெருமையாக சொல்வேன்.. கிறிஸ்துமஸ் என்றாலே மகிழ்ச்சி தான் - பூரித்து பேசிய உதயநிதி

post-img
கோவை: ஒட்டுமொத்த உலகத்தையும் மகிழ்ச்சி தரும் விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்டு நானும் ஒரு கிறிஸ்தவன் தான் என்று பெருமையாக சொன்னேன். உடனே சங்கிகளுக்கு பயங்கர வயிற்றெரிச்சல். மீண்டும் நான் உங்கள் முன்பு சொல்கிறேன். இதை சொல்வதில் நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான் என்று கோவையில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் கோவையில் இன்று SPC பெந்தெகோஸ்தே சபைகள் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன்பிறக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுக சார்பிலும் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் இனிமையான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இங்கு நீங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி உள்ளனர். நீங்கள் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் கூடியிருக்கீங்க. எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்கள் ஜொலித்து கொண்டு இருக்கின்றன. வண்ண விளக்குகள் மின்னி கொண்டு இருக்கின்றன. எல்லோரது முகத்திலும் ஒரு சிரிப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு தெரியும் டான் பாஸ்கோ ஸ்கூலில் தான் நான் படித்தேன். மேல்படிப்பு படித்தது லயோலா கல்லூரியில். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்டு நானும் ஒரு கிறிஸ்தவன் தான் என்று பெருமையாக சொன்னேன். உடனே சங்கிகளுக்கு பயங்கர வயிற்றெரிச்சல் ஏற்பட்டது. மீண்டும் நான் உங்கள் முன்பு சொல்கிறேன். இதை சொல்வதில் நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான். என்னை கிறிஸ்டின் என்று நினைத்தால் நான் கிறிஸ்டின். என்னை முஸ்லிம் என்று நினைத்தால் நான் முஸ்லிம். என்னை இந்து என்று நினைத்தால் நான் இந்து. ஏனென்றால் நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். எப்போதுமே அப்படித்தான் இருப்பேன்'' என்று கூறினார்.

Related Post