குவைத் சிட்டி: குவைத்தில் இந்திய தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்திய தொழிலாளர் ஒருவர், பிரதமர் மோடியிடம், ”சார் நீங்கள் எப்போதாவது மெடிக்கல் லீவ் எடுத்துள்ளீர்களா?” எனக் கேட்டார். இதற்கு பிரதமர் மோடி சுவாரசியமாக பதிலளித்தார். பிரதமர் மோடி என்ன பதிலளித்தார் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
43ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குவைத்திற்கு இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2 நாள் அரசு முறைப்பயணமாக குவைத் சென்ற மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குவைத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
குறிப்பாக அங்கு வசித்து வரும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது தொழிலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார். அதில் சில தொழிலாளர்கள், பிரதமர் மோடியிடம் சுவாரசியமான சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக இந்திய தொழிலாளர் ஒருவர், பிரதமர் மோடியிடம், "சார்! நீங்கள் எப்போதாவது மருத்துவ விடுப்பு எடுத்து இருக்கிறீர்களா? என்று கேட்டார்.
இதைக்கேட்டதும் உடனே சிரித்த மோடி, ”தொழிலாளர்களின் வியர்வை வாசம் தான் எனக்கு மருந்து” எனக் கூறினார். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்ற விவரத்தை கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், 2014 முதல் ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை. நாட்டின் பிரதமர் ஒருவர் அனைத்து நேரத்திலும் பணியில் இருக்கிறார்" என்று பதிலளித்து இருந்தது.
அதேபோல, பாஜகவினரும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் உழைப்பதாகவும் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்றுவதாகவும் கூறி வருகிறார்கள். குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”மோடி, 20 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை" எனப் பேசியிருந்தார். இத்தகைய சூழலில்தான், பிரதமர் மோடியிடம் குவைத்தில் வைத்து இந்திய தொழிலாளர், மெடிக்கல் லீவ் எப்போதாவது எடுத்துள்ளீர்களா? எனக்கேட்டுள்ளார். இவரது கேள்வியும், அதற்கு பிரதமர் மோடி அளித்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக குவைத் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். பிரதமர் மோடிக்கு குவைத் பயணத்தின் போது அந்நாட்டு மன்னர், ஷேக் மிஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
முன்னதாக குவைத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- இந்தியாவில் இருந்து குவைத் நாடு வெறும் 4 மணி நேர பயண தொலைவில் தான் இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு இந்திய பிரதமர் வருவதற்கு 40 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கு வருகிறார்கள். உங்களோடு இருக்கிறார்கள். இந்தியாவுகும் குவைத்துக்கும் இடையிலான உறவானது, நாகரிகங்கள், கடல், பாசம் மற்றும் வணிகம் ஆகியவற்றைப் பற்றியது.
இப்போது குவைத் நாடு இந்தியாவின் மிக முக்கிய எரிசக்தி, வர்த்தக கூட்டாளியாக இருக்கின்றது. இதேபோல் குவைத்தில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு பெரிய முதலீட்டு இடமாக உள்ளது. நெருக்கடி மற்றும் கடினமான காலங்களில் இரு நாட்டினரும் ஒருவருக்கொருவர் துணை நின்றுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் இரு நாடுகளுமே ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்தனர். இவ்வாறு அவர் பேசினார்.