திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கின்றனர். நேரடியாக கட்சி மாநாட்டை நடத்தாமல் அணிய தொடர்பான மாநாடுகளை நடத்தி விட்டு அதற்குப் பிறகு பிரம்மாண்டமாக பாமக மாநாட்டை நடத்தி எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்க்க அன்புமணி திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் பாமகவினர்.
திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சாா்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவா் பேரியக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், உழவா்கள் என தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் போ் கலந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல், மாநாடுக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து வரும் உழவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளை ஒன்று திரட்டி இந்த மாநாட்டை பாமக நடத்த உள்ளது. விவசாயிகளுக்காக பாமக நடத்தும் இந்த மாநாடு பிற கட்சிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது
பாமக இந்த மாநாட்டை மையமாக வைத்து பெரிய மாநாட்டை நடத்துவதற்கான திட்டத்தை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது," பாமக 7 ஆண்டுகளாக பெரிய மாநாடுகள் நடத்தாமல் இருப்பது தொண்டர்கள் இடையே சிறிய சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பாமக எப்போதுமே மாநாடுகள் மூலம் தனது செல்வாக்கை தமிழ்நாடு முழுவதும் நிரூபிப்பது வழக்கமாக வைத்திருக்கிறது.
மாநாடு இல்லாமல் இருப்பது நிர்வாகிகளுக்கு இடையே சுணக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், இதை அறிந்த தலைமை உடனடியாக மாநாடு நடத்த திட்டம் தீட்டியது. ஒரு மாநாடு நடத்தி முடிப்பதை விட ஒவ்வொரு துணை அமைப்பை வைத்து தனித்தனி மாநாடு நடத்தி, அதன் பிறகு பெரிய மாநாடு நடத்தலாம் என்பது பாமக திட்டத்தை மாற்றியுள்ளது .
இதனைத் தொடர்ந்து பாமகவின் தலைவராக இருக்கும் அன்புமணி, திமுக ஆட்சியில் விவசாயிகள் வேதனையில் இருப்பதாகவும், விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து விவசாயிகளை வைத்து ஒரு மாநாடு நடத்த திட்டம் தீட்டினார். இதன் பலனாகவே இன்று விவசாய மாநாடு நடத்தப்பட உள்ளது என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்
இதற்கு அடுத்தது துணை அமைப்புகளை வைத்து மாநாடுகளை நடத்தவும்,பாமக திட்டம் வைத்திருக்கிறதாம். இதன்பிறகு பாமக தொண்டர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவ்வாறு பாமக நடத்தும் மாநாடு தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் நடக்காத அளவிற்கு புதுமையும், மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணி திட்டம் வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் அன்புமணி மாவட்டம் தோறும் சென்று கட்சி வளர்ச்சி பணிகளிலும் ஈடுபட உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவராக அன்புமணி பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.