கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புதிய மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டே இது திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் அந்த மீன் சந்தை திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடத்தில் பேருந்து நிலையம், மேம்பாலம் என்று பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஆனால் கோவை வாசிகளுக்கு உக்கடம் என்றால் நினைவுக்கு வருவது உக்கடம் மீன் சந்தை தான். மொத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை அடிப்படையில் இரண்டு சந்தைகள் உள்ளன. இரண்டு சந்தைகளிலும் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அதிகமாக தான் இருக்கும்.
உக்கடம் புல்லுக்காடு சிஎம்சி காலனியில் துப்புரவு பணியாளர் குடியிருப்பு இருந்தது. சமீபத்தில் மாநில நெடுஞ்சாலை துறையால் கட்டி திறக்கப்பட்ட ரூ.480 கோடி மதிப்பிலான உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணிகளுக்காக அந்த குடியிருப்பு இடிக்கப்பட்டது. உடனடியாக தமிழ்நாடு குடிமை மாற்று வாரியம் அங்கிருந்த 432 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் கட்டும் பணியில் இறங்கவுள்ளது.
புல்லுக்காடு பகுதியில் புதிய மீன் சந்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு புதிய மீன் சந்தை திறக்கப்பட்டவுடன், பழைய மீன் சந்தை உள்ள பகுதியை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அங்கு புதிய குடியிருப்பு கட்ட உள்ளார்கள்.
2021 ஆம் ஆண்டு கோவை மாவட்ட சில்லறை மீன் விற்பனை சங்கத்தினர் ரூ.1.06 கோடி நிதியில் (சங்கத்தின் செலவில்) மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மீன் சந்தை கட்ட அனுமதி கேட்டனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. மேலும் அந்த இடத்தில் போர்வெல், கழிப்பறை உள்ளிட்ட கூடுதல் வசதிக்கும் அனுமதி வழங்கினார்கள்.
மொத்தம் 72 கடைகள் அமைக்கும் பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே நிறைவு பெற்றுவிட்டது. இவற்றில் 51 கடைகளுக்கு மாநகராட்சியில் பணம் செலுத்திவிட்டார்கள். மீதம் 21 கடைகளுக்கான தொகை காத்திருப்பில் உள்ளது. கட்டணம், அபராதம் உள்பட மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையை முழுவதுமாக செலுத்தினால் தான், மீன் சந்தை சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அரசாணை கூறுகிறது.
2024 தொடக்கத்திலேயே இந்த மீன் சந்தை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகை செலுத்தாத காரணத்தால் திறக்கப்படவில்லை. ஒருவேளை 21 கடைகள் கட்டணம் செலுத்த தவறும்பட்சத்தில், ஏற்கனவே கட்டணம் செலுத்திய 51 கடைகள் மட்டும் இயங்குவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கும்.
அதனால் புல்லுக்காடு மீன் சந்தை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசாணைப்படி ஓராண்டு வாடகை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டில் 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக மீன் விற்பனையாளர் சங்கத்துக்கு கடைபிடிக்க சில விதிமுறைகளும் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் அகற்றுதல் உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதேபோல கடைகள் மற்றும் போர்வெலுக்கான மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீத தொகையை செலுத்த மாநகராட்சியிடம் வியாபாரிகள் நேரம் கேட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பாக மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்களாம். அந்த செயல்முறை முடிந்தவுடன் சந்தை மொத்தமாக வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.