கோவை அமைதியாக இருப்பது பிடிக்கவில்லையா.. திமுக மீது பாயும் அண்ணாமலை

post-img
கோவை: அல் உமா தலைவர் பாஷா மறைவு இறுதி ஊர்வலம் விவகாரத்துக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்திருப்பதை ஏற்க முடியாது. கோவை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவுக்கு உரிய நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்." என கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கையில் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதயநிதி, 'இந்தி தெரியாது போடா' என்று சொன்னவர். அவருக்கு அமித்ஷா பேசியது என்ன புரிந்தது. உதயநிதி செய்தியாளர்களை நடத்தும் விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியிலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி பாஜக மக்கள் வரும் இடமாக மாற்றியுள்ளது. கொங்கு பகுதியில் எனக்கு அதிக சொந்தங்கள் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசு எடுக்க கூடிய நடவடிக்கைகளில் நான் தலையிடுவதில்லை. அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. 35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏன் காங்கிரஸ் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் நேரு அம்பேத்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அம்பேத்கருக்கு போடுகிற ஓட்டு குப்பையில் போடுகிற ஓட்டு என்றார் நேரு. பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை. அல் உமா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொறுப்பில் இருக்க கூடிய அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சீமான் பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எங்கே அரசியல் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். 1998 குண்டு வெடிப்பால் கோவையின் வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டது. இஸ்லாமியர்கள் அனைவரும் நல்லவர்கள். அதில் உள்ள ஒரு சிலர் செய்யும் தீவிரவாதத்தை தான் பாஜக எதிர்க்கிறது. இதை எதிர்த்து நாளை மறுநாள் பாஜக சார்பில் கோவையில் கருப்புக் கொடி பேரணி நடத்த திட்டமிட்டோம். அந்தப் பேரணிக்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா. பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. பயங்கரவாதத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்று மக்கள் யோசிக்க வேண்டும். கோவை குண்டுவெடிப்பு தமிழக வரலாற்றின் ஓர் கருப்பு நாள். அமைதியாக இருந்த கோவையை ரத்த களறியாக்கியதால், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியே தடைபட்டது. பயங்கரவாதிகளால் கோவை குண்டுவெடிப்பு மட்டும் நடத்தப்படாமல் இருந்திருந்தால், பெங்களூரு, புனே போல கோவையும் தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியிருக்கும். கோவையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாழ்விழக்க காரணமாக இருந்தவர் பாஷா. கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என்று விசாரணை அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவர். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவரது மத முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு காரணமான ஒருவருக்கு இறுதி ஊர்வலம் நடக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்து அமைப்புகள், பாஜகவின் நிர்வாகிகளின் இறுதி ஊர்வலத்திற்குகூட கடந்த காலங்களில் கோவை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு காரில் சிலிண்டரை வைத்து வெடிக்க முயற்சி நடைபெற்றது. கடவுளின் அருளால் அது தோல்வியில் முடிந்தது. இப்படி கோவையில் பயங்கரவாதச் செயல்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் நிலையில் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்திருப்பதை ஏற்க முடியாது. கோவை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட கோவை மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவுக்கு உரிய நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்." என்றார்.

Related Post