சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நீக்கத்தால் கட்சிக்கு எந்தவித பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மணி சில தினங்கள் முன்பு ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியை ஒரு ரீவைண்ட் செய்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
திருமாவளவன் தலைமையிலான விசிக, திமுக கூட்டணியில் இருந்தபோது, 2019 லோக்சபா 2021 சட்டசபை மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் முக்கியமான வெற்றிகளைப் பெற்றது. இது, கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தியது. ஆதவ் அர்ஜுனாவின் நீக்கத்திற்குப் பின்னர், திமுகவுடன் உறவு மேம்படும் வாய்ப்பு இருப்பது ஒரு வகையில் திருமாவளவனுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் பிரச்சாரம்: ஆதவ் அர்ஜுனா தன்னை நோக்கி பல்வேறு ஆதரவுகளை திரட்ட வாய்ப்பு உள்ளது. "நான் கட்சியின் நலனுக்காக போராடினேன். திருமாவளவனுக்கு முக்கியத்துவம் தேவை என்றுதானே பேசினேன். நமது கொள்கை எதிரிகளான பாஜகவுக்கு ஆதரவாகவா நடந்துகொண்டேன். இல்லையே. பிறகு ஏன் என்னை தூக்கியடிக்க வேண்டும்" என பிரச்சாரம் செய்து கட்சித் தண்டர்களை தன்னை நோக்கி ஈர்க்க முயற்சிப்பார். இது, கட்சியின் அடிப்படை அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தலாம்.
விசிகவின் அடிப்படை தொண்டர்கள், ஆதவ் அர்ஜுனாவின் நீக்கத்தால் தங்களின் முக்கியத் தலைவரை இழந்த உணர்வால் புண்படலாம். இது, வாக்கு அரசியலில் விசிக கட்சியின் வலுவை குறைக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
திருமாவளவன் ஆரம்பத்திலேயே ஆதவை கண்டித்திருக்க வேண்டும். இப்போது எல்லை மீறிப்போய்விட்டது. ஆதவை வைத்திருந்தால் திமுக கோபிக்கும். தேர்தலில் கூட்டணி தொடர்ந்தாலும் திமுக ஓட்டு விசிகவுக்கு வராது. நீக்கினாலோ, விசிகவின் ஓட்டுகளில் சில சிதறும். சும்மா இருக்கும்போதுகூட ஓகே. இப்போது விஜய் தன்னை ஒரு தலித் ஓட்டுக்களை ஈர்க்கும் தலைவராக முன்னிறுத்தும் காலகட்டத்தில் ஆதவின் நீக்கம், விஜய்க்கு வலு சேர்க்கும். அதனால்தான் திருமாவளவன் யோசித்தபடியே உள்ளார். இவ்வாறு மணி தெரிவித்திருந்தார்.
அதன்படி பார்த்தால், இப்போது விசிகவின் வாக்கு வங்கி விஜய்க்கு ஷிப்ட் ஆக வேண்டும். ஆனால் திமுக கூட்டணி வலுவாக இருக்கப்போகிறது. மணி கணிப்பது போல நிஜமாகவே விஜய்க்கு ஓட்டு ஷிப்ட் ஆனால், கூட்டணி இருந்தும் விடுதலை சிறுத்தைகளுக்கு பலன் கிடைக்காது. ஆனால் ஓட்டு ஷிப்ட் ஆகவில்லை என்றால் திருமாவிற்கு இந்த நடவடிக்கை பலனைத்தான் அளிக்கும். ஏனெனில் மகிழ்ச்சியடைந்துள்ள திமுகவினர் ஓட்டுக்கள் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு பரிமாற்றமடையும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage