வாட்ஸ் அப் பார்வேடு மெசேஜ் என்று யாராவது ஒரு மோசமான விஷயத்தை பகிர நினைத்தால் , அவர்கள் இனி எஸ்வி சேகர் வழக்கின் தீர்ப்பை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிச்சயம் ஒரு பெரிய பாடம் ஆகும். சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
அதிமுகவின் சார்பில் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். முன்னாள் பாஜக நிர்வாகியும் கூட.. இவர்
கடந்த 2019-ம் ஆண்டு தன் பேஸ்புக் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஒரு மோசமான அவதூறு பதிவை வெளியிட்டிருந்தார்.இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து எஸ்வி சேகர் வீட்டின் முன்பு பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். எஸ்வி சேகரை கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் பலர் அன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் எஸ்வி சேகர் மீது அப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் எனில் நெல்லை, கரூர், அம்பத்தூர் கோர்ட்டுகளிலும் பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோபால்சாமி, தலித் பாண்டியன், எஸ்.சேகரன் ஆகியோரும் தனித்தனியாக எஸ்வி சேகர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.
அடுத்தடுத்து தன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தன் மீதான வழக்குகளை எல்லாம் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. எஸ்வி சேகர் சார்பில் "பத்திரிகையாளர்கள் குறித்த முகநூலில் வெளியிட்ட பதிவை உடனே அகற்றி விட்டேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன். இந்த பதிவை அமெரிக்காவில் உள்ள திருமலை சடகோபன் வெளியிட்டிருநதார். அந்த பதிவைத்தான் மறுபதிவு செய்தேன். அதனால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணை முடிந்த நிலையில் எஸ்வி சேகரின் வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருந்தாவது: மனுதாரர் படிச்சவர், சமூகத்தில் பிரபலமானவர். எம்.எல்.ஏ.வாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதுபோன்ற நபர்கள் இதுபோல பதிவை வெளியிட்டால், அது நமது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அதுமட்டுமின்றி எஸ்.வி.சேகர் முகநூல் பக்கத்தை 5 ஆயிரம் பேர் பின்தொடர்வதாக அவரே தெரிவித்துள்ளார். அந்த 5 ஆயிரம் பேரும், அந்த பதிவை மறுபதிவு செய்திருந்தால்? சாதாரண மனிதர்கள் பதிவு வெளியிடுவதிலும், மனுதாரரை போன்ற பிரபலமான நபர்கள் வெளியிடுவதிலும் பெரும் வித்தியாசம் உள்ளது. எனவே, யாராக இருந்தாலும், இதுபோன்ற ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன்ப சிந்திக்க வேண்டும்.
எனவே, இவர் (எஸ்வி சேகர்) மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இவர் மீது பல்வேறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உடனே மாற்ற வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறினார்.
இதேபோல் இன்னொரு வழக்கும் எஸ்வி சேகர் மீது போடப்பட்டிருந்தது. அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு ராஜரத்தினம் என்பவர் புகார் செய்தார். இதன்படி பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கையும் விசாரித்த நீதிபதி என். ஆனந்த்வெங்கடேஷ், அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.