சென்னை: சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்று பெற்றுள்ளதன் மூலம் உலகில் இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதற்கிடையே அவரது சொத்து மதிப்பு என்ன.. இந்த ஒரு தொடரில் அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்து வந்த நிலையில், அதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ் மற்றும் அவருக்கு எதிராகச் சீன வீரர் டிங் லிரன் போட்டியிட்டனர்.
எப்போதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் என்பது 14 சுற்றுப் போட்டிகளாக நடக்கும். அதில் எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவரை சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.
கடும் போட்டி: இந்த முறை குகேஷுக்கும் டிங் லிரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் 13 சுற்றுகளில் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்ற இருந்தனர். மற்ற 11 போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், இருவரும் 6.5 புள்ளிகளைப் பெற்று இருந்தனர். இதனால் கடைசி போட்டி மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. வியாழக்கிழமை நடந்த இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களில் டிங் லிரன் களமிறங்கிய நிலையில், கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் போட்டியிட்டார்.
போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் குகேஷ் வெற்றியை வசமாக்கினார். இதையடுத்து குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். குகேஷின் வெற்றி செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அனைவருக்கும் பெரும் உத்வேகத்தைத் தருவதாக இருக்கும். இதற்கிடையே உலக சாம்பியன் குகேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு.. இந்த ஒரு தொடரில் அவர் எவ்வளவு பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
பரிசுத் தொகை: இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பு வரை குகேஷின் நிகர மதிப்பு ரூ. 8.26 கோடி ($1.5 மில்லியன்) ஆக இருந்ததாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது வருவாய் பெரும்பாலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றதால் கிடைத்தவையாகும். விளம்பர தூதராக இருப்பதாகலும் கணிசமான தொகை அவருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நாட்டின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரான குகேஷ் சர்வதேச தொடர்களில் வெல்லும் போது மத்திய மாநில அரசுகளும் தனியாகப் பரிசுத் தொகைகளை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில வாரங்களில் மட்டும் அவருக்குப் பரிசுத் தொகை மூலமே சுமார் 17 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளார். அதாவது இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றதால் அவருக்குப் பரிசுத் தொகையாக ரூ. 11.45 கோடி கிடைக்கிறது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டிங் லிரன் ரூ.9.75 கோடி பெற்று இருக்கிறார்.
17 நாட்களில் கிட்டதட்ட ரூ. 17 கோடி: இது தவிர இந்த செஸ் சாம்பியஷிப் ரூல்ஸ்படி ஒவ்வொரு ஆட்டத்திலும் வெல்வோருக்கு ரூ.1.69 கோடி வழங்கப்பட்டும். குகேஷின் மூன்று போட்டிகளில் (அதாவது 3வது, 11வது, மற்றும் 14வது) வென்றுள்ள நிலையில், அவருக்கு இதன் மூலமாகக் கூடுதலாக அவருக்கு ரூ.5.07 கோடி கிடைக்கும்.. இதன் மூலம் கடந்த 17 நாட்களில் மட்டும் 17 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக நியூஸ்18 செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது..
இதன் மூலம் குகேஷின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்பது இப்போது ரூ.25 கோடியைத் தாண்டிவிட்டது. இது தவிரத் தமிழக அரசும் கூட குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.