மழைக்காலம் வந்துவிட்டாலே, நோய்க்கிருமிகளும் பல ரூபங்களில் பரவிவிடும்.. இதன்விளைவு வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என்று பல தொற்றுநோய்கள் நம்மைப் பாதிக்கத்தொடங்கிவிடும்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், இந்த மழைக்காலத்தில் வீர்யம் பெற்றுவிடுகின்றன. மழையில் நாம் நனைய நேரிடும்போதெல்லாம் இந்தக்கிருமிகள் நமக்கு பரவக்கூடிய வாய்ப்பும் அதிகமாகிவிடுகிறது. .
யாரை பாதிக்கும்: குறிப்பாக, ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள்தான் இதுபோன்ற தொற்றுகளில் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான், மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. இதில், பலரும் பாதிக்கப்படுவது மஞ்சள் காமாலை நோயால்தான்.
தண்ணீர், உணவு மாசு மூலம் "ஹெபடைட்டிஸ் A" வைரஸ்கள் தாக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். எனவே, இதுபோன்ற நேரங்களில் சுத்தமான குடிநீரை குடிப்பதும், மாவுச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதும், மிகவும் முக்கியமாகும். அதைவிட முக்கியம், எண்ணெய் - கொழுப்பு உணவு வகைகளை தவிர்ப்பது இந்த நோயைக்குணப்படுத்தும்.
தடுப்பூசிகள்: இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. எனினும், குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஓராண்டு கழித்து ஒரு முறை என இரண்டு தவணைகளில் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
கல்லீரல் புற்றுநோய்: "மஞ்சள் காமாலை (Hepatitis-B Vaccine) தடுப்பூசி மஞ்சள் காமாலை வைரஸ் தொற்றை தடுப்பதுடன், அது தொடர்பான கல்லீரல் நோய்களை, கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் மிக முக்கியமான தடுப்பூசி ஆகும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மஞ்சட் காமாலை தடுப்பூசி கடந்த ஆறு மாதங்களாக தட்டுப்பாடாக உள்ளது என்ற செய்தி வெளி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சிறுநீரக மருத்துவப் பிரிவுகளில் ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) என்ற ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்நிலையில் இத்தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
நோயாளிகள்: இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதிய அளவு மஞ்சள் காமாலை தடுப்பூசியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மத்திய மற்றும் மாநில அரசுகளை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.