சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற போது அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.
ஆனால் இந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கலைஞர் கருணாநிதியின் பிறந்தாளன்று பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட முடியாமல் போனது.
அதன் தொடர்ச்சியாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படவுள்ளது.