50 ஆண்டு கனவு.. களமிறங்கிய ஐஐடி.. ஹைடெக்காக மாறும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம்

post-img
கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் முக்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பேருந்து கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தற்போது அடிப்படை வசதிகள் கூட குறைவாக உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் காந்திபுரம் பேருந்து நிலையத்தை ரூ.30 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் மேம்படுத்த முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. நீண்ட கால கோரிக்கையான கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன. மேம்பாலம் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி நீலாம்பூர் வரை உயர் மட்ட மேம்பாலம், சாய்பாபா காலனி பகுதியில் 2 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.200 கோடி மதிப்பில் கோவை சாலைகளை புனரைக்கும் பணிகள், மேற்கு புறவழிச்சாலை, அவிநாசி - மேட்டுப்பாளையம் 4 வழிச்சாலை பணிகள், காளம்பாளையம் - மாதம்பட்டி 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தங்கநகை பூங்கா அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ.டி துறையிலும் கோவை முக்கிய ஹப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. டெக் சிட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுதவிர செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. காந்திபுரம் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதேபோல காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள் உள்ளன. உள்ளூர் பேருந்து நிலையத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பேருந்து நிலையத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மற்றும் பழனி, கேரளா பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தை ரூ.30 கோடி மதிப்பில் புனரமைக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இடப்பற்றாக்குறையை போக்கி, பார்க்கிங் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புனரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். காந்திபுரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளாகின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தினாலும் அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. கழிவறை கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலையம் சுகாதாரமாக இல்லை. தளமும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை மேம்படுத்த வேண்டும் என மக்களும், பேருந்து ஓட்டுநர்களும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 50 பேருந்துகள் இயக்கப்படும். ஐஐடி மெட்ராஸ் வல்லுநர் குழு உதவியுடன் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்து பணிகள் தொடங்கப்படும் என்றனர். தனித்தனி பஸ் பே, சார்ஜிங் ஸ்டேசன்கள், காத்திருப்போர் பகுதி, அண்டர் கிரெளண்ட் பார்க்கிங், வணிக வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல உக்கடம் பேருந்து நிலையம் ரூ.21.55 கோடி மதிப்பில் உக்கடம் பேருந்து நிலையம் புனரமைக்கப்படவுள்ளன. காந்திபுரம் மற்றும் உக்கடம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்களிலும் கோவை மாநகராட்ச ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஐஐடி குழு ஆய்வு செய்துள்ளனர்.

Related Post