அமெரிக்காவோடு நட்பு பாராட்ட விரும்பும் 13% கனடா மக்கள்.. ட்ரம்ப் ஆசைப்படி ஒரே நாடாக மாறுமா?

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், அமெரிக்காவின் 51வது மாகாணமாகக் கனடா இணைய வேண்டும் எனக் கூறியது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே டிரம்பின் இந்த கருத்துக்குக் கனடாவிலும் ஓரளவுக்கு ஆதரவு இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், இன்னும் ஒரு மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கவுள்ளார். அதேநேரம் அவர் இப்போது தனது தடாலடி பேச்சுகளை ஆரம்பித்துவிட்டார். கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறும் எனச் சமீபத்தில் அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது சமீபத்தில் கனடாவில் இருந்து சட்ட விரோதமாகப் பல அகதிகளும் போதைப்பொருட்களும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகச் சொன்ன டிரம்ப், இதற்காகக் கனடா மீதுவ 25% வரி விதிக்கப் போவதாகக் கூறியிருந்தார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆன நிலையில், டிரம்பை கனடா பிரதமர் ட்ருடோ நேரில் சந்தித்தார். அப்போது டிரம்ப், "நீங்கள் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டீர்கள். இதன் காரணமாகவே இந்த வரியை விதிக்கப் போகிறேன். இது கனடாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கும் என நீங்கள் நினைத்தால் பேசாமல் அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைந்து கொள்ளுங்கள்" எனக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு ட்ரூடோ உள்ளிட்ட அனைத்து கனடா அதிகாரிகளும் ஸ்டன் ஆகிவிட்டார்களாம். மேலும், அப்போது அமெரிக்க மாகாணங்களின் ஆளுநர்களைக் குறிப்பிடுவது போல ட்ரூடோவை கனடா ஆளுநர் எனக் குறிப்பிட்டு தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். அப்போது முதலே இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் 51வது மாகாணமாகக் கனடா இணைய வேண்டும் என்று கனடா நாட்டை சேர்ந்த பலரும் விரும்புவதாகவும் தான் ஒரு சிறந்த யோசனை முன்வைத்து இருப்பதையே இது காட்டுவதாகவும் டிரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவின் 51வது மாகாணமாகக் கனடா இணைய வேண்டும் என்பதைப் பல கனடா நாட்டவர்கள் விரும்புகிறார்கள். இது உண்மையாகவே ஒரு சிறந்த ஐடியா.. இது நடந்தால் கனடா நாட்டு மக்களால் வரி மற்றும் ராணுவ பாதுகாப்பில் பெரியளவில் சேமிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற டிரம்ப்பின் இந்த கருத்துக்குக் கனடாவில் கலவையான எதிர்வினைகள் இருந்தது. ஒரு சில கனடா நாட்டு அதிகாரிகள் டிரம்பின் இந்த கருத்துக்களை அவமானகரமானது மற்றும் மோசமானது என்றும் கடுமையாகச் சாடினர். கனடா இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடாக இருக்கும் போது டிரம்ப் எப்படி இதுபோல சொல்லலாம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் சமீபத்தில் Leger என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் சுமார் 13 சதவீத கனடா மக்கள், அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளுக்கு ஆதரவாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிடும் வகையிலேயே டிரம்ப் தனது யோசனை மிகவும் சிறந்தது என்றும் அமெரிக்காவின் ஒரு மாகாணமாகக் கனடா இணைய வேண்டும் என டிரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார். ஏற்கனவே கனடா நாட்டின் துணைப் பிரதமராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் என்பவர் அந்நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய சில மணி நேரம் இருந்த போது திடீரென ராஜினாமா செய்தார். உள்நாட்டிலேயே கனடாவில் இதுபோல பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், டிரம்ப்பும் தொடர்ந்து இதுபோல பேசி வருவது சர்ச்சையாகியுள்ளது.

Related Post