விடுதலை-2..எத்தனை கெட்ட வார்த்தை..நறுக்கென கத்தரி போட்ட சென்சார்! இதுக்கெல்லாம் தடையா? பறந்த கண்டனம்

post-img
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்துக்கு சென்சார் அமைப்பு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு இடங்களில் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், இது கருத்து சுதந்திரம் பாதிப்பது போல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரு வெற்றி பெற்ற நிலையில் விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் பாகம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்திலும் சூரி, விஜய் சேதுபதி, ராஜுமேனன், இளவரசு, கௌதவ் வாசுதேவ் மேனன், சரவணா சுப்பையா, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் ,கிஷோர் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ள நிலையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி சென்சார் போர்டிடம் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் படத்தில் வன்முறை காட்சிகளும், ஆபாச வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி 'ஏ' சான்றிதழ் வழங்கியது. இந்த நிலையில் படத்தின் ஏழு இடங்களில் மாற்றம் செய்ய சொல்லி சென்சார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. படத்தில் சில கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருக்கும் நிலையில் அவற்றை நீக்க வேண்டும், புகை பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வசனம் இடம் பெற வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களோடு சில வசனங்களை நீக்க சொல்லியுள்ளது. மேலும் சாதியை குறிக்கும் சொற்கள், அரசியல் கட்சிகளை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டதோடு, ரத்தம் வன்முறையான காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. படம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் நிலையில் அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ஆயுதங்களை மக்களை அந்தந்த போராட்ட களங்களில் இருந்து உருவாக்கிக்கணும்' என்ற வசனம் மாற்றப்பட்டு. அதில் ழ்'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்" என சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்சார் போர்டின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக இருப்பதாகவும் உண்மையான வசனங்களை இடம் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. இதுதொடர்பாக எக்ஸ் பதிவில்,"சமூக அக்கறையுள்ள இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்களின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் திசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. குறிப்பாக, 'அரசு''அரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. 'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார். ஆபாசம்,பிற்போக்குத்தனம், சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும் சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் திரு.வெற்றிமாறன் அவர்கள். விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில்,தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும். தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

Related Post