சென்னை: "தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்க.." என சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக கேட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதன் பிறகு எழுந்த நயினார் நாகேந்திரன் பேச்சால் சட்டசபையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கனிம வளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார்.
டங்ஸ்டன் தீர்மானம்: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மாநில அரசு அனுமதியின்றி எந்த ஒரு சுரங்கத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது என்றும் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் பேச்சு: இந்த தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசினர். அப்போது பாஜகவின் கருத்து குறித்து சபாநாயகர் அப்பாவு, பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனை பேச அழைத்தார்.
அதன்படி, பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் பேசும்போது, நாங்களும் ஏற்கனவே மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் பேசியுள்ளோம். நல்ல செய்தி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.
ஒரே வார்த்தையில் சொல்லுங்க - முதல்வர் ஸ்டாலின்: இதையடுத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "பாஜகவை சார்ந்த நயினார் நாகேந்திரன் ரொம்ப அழகாக பேசி இருக்கிறார். நான் கேட்பது, அவை முன்னவர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதை மட்டும் ஒரே வார்த்தையில் சொல்லுங்க.. வேற ஒண்ணும் இல்லை" என்றார்.
மீண்டும் பூசி மெழுகிய நயினார்: இதையடுத்து மீண்டும் எழுந்த நயினார் நாகேந்திரன், "அந்தப் பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே மத்திய அமைச்சரிடம் பேசி உள்ளோம். கூடிய சீக்கிரம் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்" எனக் கூறினார்.
அவையில் சிரிப்பலை: ஆதவரா? எதிர்ப்பா? என ஒரே வார்த்தையில் கூறுமாறு முதல்வர் ஸ்டாலின் சொன்ன பிறகும், தீர்மானத்துக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் பூசி மொழுகினார் நயினார் நாகேந்திரன். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "அப்படி என்றால் நீங்கள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்கிறோம். " எனத் தெரிவித்தார். தொடர்ந்து, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
Weather Data Source: Wettervorhersage 21 tage