மும்பை படகு விபத்து.. கடற்படை வீரரின் அலட்சியம் காரணமா? வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடக்கம்

post-img
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மதியம், பயணிகள் படகு மீது, கடற்படைக்கு சொந்தமான அதிவேக படகு ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படகை ஓட்டி வந்த கடற்படை வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பையின் பிரபல சுற்றுலாத் தளமான புட்சர் தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நடந்திருக்கிறது. சரியாக மதியம் 3.55 மணி அளவில், பயணிகள் படகு மீது அதிவேகமாக வந்த சிறிய ரக படகு ஒன்று மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் பயணிகள் படகில் 114 பேர் பயணித்திருந்ததாகவும், அந்த வழியாக வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக படகு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதாவது நேற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று மும்பை துறைமுகத்தில் என்ஜின் சோதனையில் ஈடுபட்டிருந்தது. படகில் கடற்படை வீரர்கள் சிலர் இருந்துள்ளனர். இவர்கள் அதிவேக சிறிய ரக படகை எடுத்துக்கொண்டு என்ஜின் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து குறித்து அறிந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. மொத்தம் 15 படகுகள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. மொத்தம் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 3 கடற்படை வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்துள்ள குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்தார். அவர்களின் குடும்பத்திற்கு தேசிய பேரிடர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கடற்படை படகு மோதியதுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. எனவே படகை அதிவேகமாக இயக்கியதற்காக கடற்படை வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலதிக விசாரணையில் உண்மை தெரிய வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Related Post