கோவை வடவள்ளியில் ஆடிப்போன ஆசிரியை.. சில நிமிடங்களில் 30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அவுட்

post-img
கோவை: கோவை வடவள்ளி, பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி கலைவாணி, வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை பள்ளிக்கு சென்றவிட்டார். மதியம் ஆசிரியையின் கணவர் ரமேஷ்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். மனைவியின் பள்ளிக்கு போய்விட்டு திரும்பிய கேப்பில், பூட்டை உடைத்து 58 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. பட்டபகலில் ஆள் இல்லாத நேரமாக பார்த்து கொள்ளை அடிக்கும் கும்பல்கள் அடிக்கடி கைவரிசை காட்டி வருகிறார்கள். கோவையில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்திருப்பவர்கள் ஓரளவு பாதுகாப்பாக இருக்க முடிகிறது. மற்றவர்கள், சிசிடிவி கேமரா அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில் சிசிடிவி கேமரா இல்லாத இடங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. கோவை வடவள்ளியில் ஆசிரியை வீட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். கோவை மாநகராட்சி வடவள்ளி, பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 53). இவருடைய மனைவி கலைவாணி. கலைவாணி வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். ஆசிரியை கலைவாணி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். இந்நிலையில் மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, தனது செல்போனில் சார்ஜ் குறைந்துவிட்டது. எனவே சார்ஜ்போட வீட்டில் இருக்கும் செல்போன் சார்ஜரை எடுத்து வரும்படி கூறினாராம். இதையடுத்து மதியம் 1.45 மணிக்கு ரமேஷ்குமார் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி கலைவாணியிடம் செல்போன் சார்ஜரை கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. அதில் இருந்த 58 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அவற்றை கொள்ளையடித்துச் சென்றதை அவர் கண்டுபிடித்தார். அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று ரமேஷ்குமார் கூறினார். இது குறித்து ரமேஷ்குமார் கோவை வடவள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரமேஷ்குமார் வீட்டில் இருந்து 2 பேர் வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே தலைமறைவான அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஆசிரியை வீட்டில் பணம்-நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Post