வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!

post-img

சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரை போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் போலீசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.
இந்நிலையில் தான் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ரவீந்தர் சந்திரசேகரை அதிரடியாக கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்தனர்.
அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக பாலாஜியிடம், ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் முதலீடு செய்தால் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பாலாஜி ரூ.16 கோடியை ரவீந்தர் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் அவரை ஏமாற்றியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரவீந்தர் சந்திரசேகர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என கூறப்பட்டது. ஆனால் புகார்தாரரான பாலாஜி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரூ.2 கோடி திரும்ப வழங்கியதாக கூறுவதில் உண்மையில்லை. தற்போது வரை ரூ.16 கோடியை திரும்ப வழங்கவில்லை என கூறப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ரூ.2 கோடி திரும்ப வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் அதுதொடர்பாக விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் ரவீந்தர் சந்திரசேகர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

 

Related Post