நடுங்கும் ஓசூர் மக்கள்.. அழையா விருந்தாளியாக தனியார் விடுதிக்குள் நுழைந்த சிறுத்தை! சிசிடிவியில் பதிவு

post-img

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள இஸ்லாம்பூர் அருகே தனியார் விடுதிக்குள் அழையா விருந்தாளியாக சிறுத்தை நுழைந்து உணவு தேடியது. இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தின் அருகே பாறைகள் உள்ளன. இந்த பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என்பது இருந்து வருகிறது.
பாறைகளில் சிறுத்தை ஒன்று கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக முகாமிட்டு சுற்றி திரிகிறது. அதோடு இந்த சிறுத்தை அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளையும் தொடர்ந்து கொன்று தின்று வருகிறது.
இதுவரை தெருநாய்கள், கால்நடைகள் என்று 20க்கும் மேற்பட்ட உயிரினங்களை சிறுத்தை கொன்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அதோடு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு அமைத்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த சிறுத்தை அருகே உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் புகுந்து இரை தேடியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான விடுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கும் இங்குமாக உலாவி உள்ளது.
இது அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரியும் இந்த சிறுத்தையால் அப்பகுதியில் மேலும் அச்ச நிலை உருவாகி உள்ளது. எனவே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக்க உள்ளனர்.

Related Post