ஆரஞ்ச் அலர்ட்டாவது ஆப்பிளாவது! செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்பா! அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு

post-img
சென்னை: ஆரஞ்ச் அலர்ட்டாக இருந்தாலும் ஆப்பிள் அலர்ட்டாக இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என அமைச்சர் துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்திருந்தார். இதை அவர் அந்த ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது தெரிவித்திருந்தார். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் வெளியேறும் உபரி நீரின் அளவும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து நீர் வருகிறது. உபரி நீர் திறந்துவிடப்பட்டால் எந்தெந்த பகுதி வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது என்பது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள், துரைமுருகனிடம் விளக்கி கூறினர். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மழை இல்லை என யார் சொன்னது, ஆரஞ்ச் போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை. குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும். அதிமுக எங்களை எதிர்த்து தீர்மானம் போடாமல் பாராட்டியா போடுவார்கள். அப்படி போட்டால்தான் அவர்கள் எதிர்க்கட்சி. அப்படி போடவில்லை என்றால் நானே கேட்பேன்... என்ன எதிர்க்கட்சி நீங்கள் என்று? நீர்வளத் துறைக்கு மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. ஒரு பக்கம் தூர்வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர்வார நிதி ஆதாரம் கொடுக்கவில்லை. கேட்டு கொண்டிருக்கிறோம், அனைத்தையும் தூர்வாருவது ஒரே நேரத்தில் முடியாத காரியம். அதற்கான நிதி தேவைப்படுகிறது. எல்லாத்தையும் கொண்டு போய் ஏரியிலும் கால்வாயிலும் கொட்டி விடுகிறார்கள். அவை அடைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதே தெரியாமல் உள்ளது. ஆற்காடு மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் பாலாறு அடைப்பு ஏற்பட்டுவிட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் என துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தம், பெஞ்சல் புயல் உள்ளிட்டவைகளால் அதிக மழைபொழிவு கிடைத்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிவிட்டனர். சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பிவிட்டன. இவற்றிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அது போல் இந்த நீர் நிலைகளுக்கும் உபரி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. அது போல் சாத்தனூர் அணை, மேட்டூர் அணை உள்ளிட்டவைகளிலும் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. அண்மையில் கூட சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதனால்தான் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், சாத்தனூர் அணை திறக்கப்படுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பிறகு தான் திறந்துவிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் திறந்துவிடப்பட்டதே அப்படியெல்லாம் இல்லை என துரைமுருகன் விளக்கமளித்திருந்தார். அது போல் அண்மையில் இரு நாட்களுக்கு சட்டசபை கூட்டத் தொடர் நடந்த போது கூட சாத்தனூர் அணை திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், சாத்தனூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னர் 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோர பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதை உறுதி செய்து கொண்ட பிறகே அணை திறக்கப்பட்டது. அணையை சரியான நேரத்திற்கு திறந்ததால்தான் உயிரிழப்புகளோ பொருட்சேதமோ ஏற்படாமல் இருந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு டிசம்பர் 18ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் டிசம்பர் மாதம் அதிக மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏற்கெனவே நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் மழை பொழிவு, நீர்வரத்தால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

Related Post