திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 1,074 குடும்பத்தினருக்கு பட்டா விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கடிதம் தந்து வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட அரசு நத்தம் புறம்போக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஒரு பகுதியினருக்கு கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
திருப்பூர் வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. அளித்த கடிதத்தில் கூறுகையில், "திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட அரசு நத்தம் புறம்போக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஒரு பகுதியினருக்கு கடந்த 2006-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் திருப்பூருக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதன்படி, 1,074 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கடிதம் அளித்தேன். அதன்படி கலெக்டர் நடவடிக்கை எடுத்து சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. விரைந்து பட்டா கிடைக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்கணகிரி பகுதியில் 184 குடும்பத்தினர், மிலிட்டரி காலனியில் 90 குடும்பத்தினர், அண்ணாநகர், பாண்டியன் நகர் ஒத்தலைன் பகுதியில் 50 குடும்பத்தினர், கொங்கணகிரி கோவில் தெற்கு பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 8 குடும்பத்தினர், தொட்டிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 13 குடும்பத்தினர், காசிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில நீர்நிலை புறம்போக்கில் 36 குடும்பங்களில் 23 குடும்பத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 13 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்.காலனி காவேரியம்மன் திருமண மண்டபம் பின்புறம் நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 19 குடும்பத்தினர், சுகுமாறன்நகர் நொய்யல் ஆறு புறம்போக்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் 496 குடும்பத்தினர், முத்தையன்நகர் மேற்கு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 201 குடும்பத்தினர் ஆகியோருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இந்நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.