வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருக்கும் எலான் மஸ்க் அடுத்து அமெரிக்க அதிபராவார் என்ற பேச்சுக்கள் இப்போது அங்கு எழுந்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் சில முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். எலான் மஸ்க்கால் அமெரிக்க அதிபராகவே முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கவுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் எலான் மஸ்க்கை அதிபர் என்று குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது டிரம்ப் பிரச்சாரத்தில் எலான் மஸ்க் மிகப் பெரியளவில் உதவி செய்திருந்தார். பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, டிரம்பிற்காக மேடையேறி பிரச்சாரம் கூடச் செய்தார். இது டிரம்பின் பிரச்சாரத்திற்குப் பெரியளவில் உதவியது. இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கும் நபராக மாறியிருக்கிறார். எலான் மஸ்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் துறை efficiency czar ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர எலான் மஸ்க் ஆதரவாளர்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே எலான் மஸ்க் தான் அதிபர் என்று குறிப்பிட்டு டிரம்பை அங்குள்ள எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் அதிகாரத்தை வைத்திருக்கும் எலான் மஸ்க் வரும் காலத்தில் அதிபராக முடியுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ஒருவர் அதிபராக அமெரிக்காவில் கட்டாயம் பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், " எலான் மஸ்க் நிச்சயம் அதிபராக மாட்டார். ஒருநாளும் அவர் அதிபராக முடியாது. இதை என்னால் உங்களுக்கு உறுதியாகவே சொல்ல முடியும். அவர் ஏன் அதிபராக முடியாது தெரியுமா? ஏனென்றால் அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை. எனவே அது நடக்க வாய்ப்பே இல்லை" என்று பதிலளித்தார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளில் அந்நாட்டின் குடியுரிமையை ஒருவரால் பெற முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கேயே இருப்பது, அமெரிக்க நாட்டவரைத் திருமணம் செய்வது உள்ளிட்டவை மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுத் தரும். ஆனால், இதுபோன்ற முறைகளில் குடியுரிமை பெற்ற ஒருவரால் அமெரிக்க அதிபராகவே முடியாது.
அமெரிக்காவிலேயே பிறந்த ஒருவரால் மட்டுமே அந்நாட்டின் அதிபராக வேண்டும். அதாவது அமெரிக்க மண்ணில் பிறந்த ஒருவரால் மட்டுமே அந்நாட்டின் அதிபராக முடியும். இந்த விதி இருப்பதாலேயே எலான் மஸ்க்கால் நிச்சயம் அமெரிக்க அதிபராக முடியாது என்பதை டிரம்ப் கூறியிருக்கிறார்.
எலான் மஸ்க்கை பொறுத்தவரைப் பலரும் அவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்றே நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் கடந்த 1971ல் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை அங்கேயே படித்து முடித்த எலான் மஸ்க், தொடர்ந்து கனடாவில் சில காலம் படித்தார். அதன் பிறகே 1990களில் அவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இருப்பினும், கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத அவர், 1995ல் அதில் இருந்து ட்ராப் அவுட் ஆனார். அதன் பிறகு சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அவர் தொடங்கி நடத்தி வந்தார். 1997ஆம் ஆண்டில் எலான் மஸ்க் ஒர்க் பெர்மிட் பெற்றார். தொடர்ந்து 2002ம் ஆண்டு அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். என்னதான் குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்பதால் அவரால் அதிபராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.