சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு திமுகவில் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். பாடலாசிரியர் பா.விஜய் உதயநிதி குறித்து பாராட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் வருகை தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டிலும் சரி, சமீபத்தில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் சரி, விஜய் திமுகவுக்கு எதிரான விமர்சனத்தை நேரடியாக வைத்துள்ளார்.
அவரின் கருத்து திமுகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடலாசிரியர் பா.விஜய், கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் இளைஞன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அவர் உதயநிதியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பா. விஜய் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதி அவ்வளவு ராசியான தொகுதி. இன்றைக்கு வரை சேப்பாக்கம் என்றால் அது அவரின் தாத்தா கலைஞரின் தொகுதி. அதில் அவர் வெற்றியடைந்திருப்பது சிறப்பான சம்பவம். அதேபோல சேப்பாகத்தில் கிரிக்கெட் மைதானமும் பிரபலம்.
கிரிக்கெட்டில் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் என்று சொல்வார்கள். சிக்ஸர் அடிக்கும்போது பந்து வெளியில் போவதை அப்படி சொல்வார்கள். துணைமுதல்வர் உதயநிதி இறங்கி சிக்ஸர் அடித்ததில் அந்தப் பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்று செங்கோட்டையில் அடித்து நாடாளுமன்றத்தில் விழுந்தது. தொகுதிக்காக உதயநிதி ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார்.
ரூ.1 கோடி மதிப்பில் நிழல் குடை, தொகுதி முழுவதும் வைஃபை வசதி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் என்று பல சாதனைகள் செய்துள்ளார். அதன் மூலம்தான் அவர் கலைஞரின் நீட்சி, தளபதியின் தொடக்கம் என்பது தெரிந்தது. ஜெர்மனியில் மேற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனியை ஒரு சுவர் பிரித்திருந்தது.
இரும்புத் திரை என்றழைக்கப்படும் அதன் பெயர் பெர்லின் சுவர். இரண்டு தரப்பு மக்களையும் அந்த அரசாங்கம் பிரித்து வைத்திருந்தனர். அந்த சுவரை உடைக்க எத்தனையோ பேர் போராடினார்கள். அப்படி போராட வந்தவர்களை எல்லாம், காவல்துறை மூலம் அடித்து விரட்டி சிறையில் அடைத்தது அரசு. 1989 காலகட்டத்தில் ஒரு இளைஞர் அங்கு புரட்சி உரை ஆற்றினார்.
காவலர்கள் தடுத்ததால் பெரிய பெரிய ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இருப்பினும் பெர்லின் சுவரை உடைத்தே ஆக வேண்டும் என்ற அந்த மக்களின் எண்ணத்துக்கு, இளைஞர் தலைமை தாங்கினார். அந்த இளைஞரின் கையில் ஒரு சிறிய கருங்கல் இருந்தது. அத்தனை காவல் கண்காணிப்புகள், அடக்குமுறைகளை மீறி பெர்லின் சுவற்றை நோக்கி ஆவேசமாக எரிந்தார்.
அந்த கல் பெர்லின் சுவர் மீது பட்டவுடன், அத்தனை மக்களும் கருங்கற்களை எடுத்து வீசினர். அந்த கற்கள் ஏவுகணை போல பாய்ந்து பெர்லின் சுவரை தாக்கின. இதில் அந்த சுவர் இரண்டாக பிளந்தது. இது வரலாறு. அது தமிழ்நாட்டிலும் நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் செங்கலை ஏந்தினார். அந்த செங்கல் சனாதனம் என்ற பெர்லின் சுவரை உடைத்தெறிந்தது. ஆட்சி பொறுப்பைப் பிடிக்க, ஜார்ஜ் கோட்டைக்கு அஸ்திவாரமாக மாறுவதற்கு உதயநிதி முக்கிய சக்தியாக இருந்தார்." என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage