வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய முயன்றதாக அமரிக்கா இந்தியா மீது குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டதாகக் கூறி அமெரிக்க அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் என்பவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகச் சொல்லி அமெரிக்கா நிகில் குப்தா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
அமெரிக்கா குற்றச்சாட்டு: 52 வயதான இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங்கை கொல்லும் சதியை அமெரிக்கா முறியடித்ததாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்தச் சூழலில் தான் நிகில் குப்தா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருக்கிறது. இந்த குர்பத்வந்த் சிங் காலிஸ்தான் பிரிவினைவாதி ஆவார். அமெரிக்கா மற்றும் கனடா என இரு நாடுகளிலும் இவர் குடியுரிமை பெற்றுள்ளார். சீக்கிஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்தியாவில் பல தீவிரவாத செயல்களைத் திட்டமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது. மேலும், அவரை இந்தியா தேடப்பட்டு வரும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.
சிஏஐ தலைவர்: இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதம் இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது உளவுத் தலைவரை டெல்லி அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக அவர் ரா அமைப்பினர் தலைவர் ரவி சின்ஹாவை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது குர்பத்வந்த் சிங்கை கொலை செய்யத் திட்டமிட்டது யார் என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்ற இந்தியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை: கடந்த ஜூலை இறுதி முதேல இந்த விவகாரம் குறித்து இந்தியா அமெரிக்கா அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்திய அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாகக் கடந்த செப். மாதம் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பைடன் டெல்லி வந்திருந்த நிலையில், அப்போது அவரும் தனிப்பட்ட முறையில் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கனடாவைப் போல இல்லாமல் முழுமையாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா எண்ணுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.