ஆடிப்பெருக்கு தினத்தன்று, பத்திரப்பதிவு துறை பெரும் சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.. இதுகுறித்து தமிழக அரசும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வரதேவையுமில்லை.
ஆன்லைன் வசதிகள்:
ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்.. இதற்கு பிறகு, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், நேற்று முன்தினம் ஆடி 18-ஐ முன்னிட்டு, பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.. காரணம், ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி அதிகமாக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு:
அதாவது, ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஈட்டப்பட்டுள்ளதாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது மக்கள் பயன் பெறும் வகையில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு 03.08.2023 அன்று பொது மக்களால் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் பொது மக்கள் பதிவு செய்ய விரும்பும் அனைத்து ஆவணங்களுக்கும் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன் பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு 150 ஆக உயர்த்தப்பட்டது.
ஆவணங்கள்:
ஆவணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளத்தில் சொத்து தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 முன் பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு டோக்கன்களும் அதிக ஆவணப்பதிவு கொண்ட 100 அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் இணைய வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 03.08.2023 அன்று ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன் பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.
ஆவணப்பதிவு:
இதனால் ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைத்து பொது மக்களுக்கும் முன்பதிவு டோக்கன்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைப்பதற்கு ஆவண செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் 03.08.2023 அன்று ஈட்டப்பட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.