வசமாய் சிக்கிய எம்எஸ் தோனி? ராஞ்சி வீட்டால் பிரச்சனை.. ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் போட்ட உத்தரவு

post-img
ராஞ்சி: ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு சொந்தமான வீட்டை விதிகளை மீறி வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. டி20 உலககோப்பை, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி் என்று ஐசிசியின் மூன்று வடிவ கோப்பைகளையும் வென்று தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை தோனியிடம் மட்டும் தான் உள்ளது. தற்போது எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல்லில் மட்டும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். முதலில் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் அவரது ரசிகர் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை. அதேபோல் கடைசி கட்டத்தில் அவரது அதிரடி ஆட்டம் என்பது தொடர்ந்து வருகிறது. இதனால் சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எம்எஸ் தோனியை Uncapped பிளேயராக ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் வரும் ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது எம்எஸ் தோனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட்டாகும். தோனி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் ஹர்மு ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு அமைந்துள்ள இடம் என்பது ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் தோனிக்கு வழங்கி இருந்தது. அதாவது தோனி கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த அர்ஜுன் முண்டா தான் வீட்டு வசதி வாரியம் சார்பில் வழங்கியிருந்தார். இந்த நிலம் மொத்தம் 10 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும். இங்கு வீடு கட்டி எம்எஸ் தோனி வசித்து வந்த நிலையில் தற்போது அவர் அதனை காலி செய்து ராஞ்சியில் உள்ள சிமாலியாஸ் ரிங் ரோட்டில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதையடுத்து ஹர்மு ரோட்டில் உள்ள தனது வீட்டை தோனி வாடகைக்கு வழங்கி உள்ளார். இந்த வீட்டில் தான் விதியை மீறி மருத்துவ பரிசோதனைக்கான லேப் ஒன்று செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. குடியிருக்கும் வீட்டில் லேப் நடத்தி பணம் சம்பாதிப்பது என்பது விதிமீறலாகும். இதுதொடர்பாக ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியத்திடம் புகார் சென்றுள்ளது. இந்த புகாரை பெற்று கொண்ட வீட்டு வசதி வாரியம் அதன்மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புகாரில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் எம்எஸ் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பி அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அந்த வாரியத்தின் தலைவர் சஞ்சய் லால் பஸ்வான் கூறுகையில், ‛‛ரெசிடென்சியல் பிளாட்டை வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது விதிமீறலாகும். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல் இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Related Post