மொத்தமாக முடங்கும் அமெரிக்கா.. அப்போ விசா விண்ணப்பங்கள் என்னவாகும்! இந்தியர்களுக்கு பிரச்சனை வருமா?

post-img
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாத நிலையில், அந்நாட்டு பெடரல் அரசு முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்காவுக்குச் செல்ல இந்தியர்கள் அதிகம் விண்ணப்பிக்கும் நிலையில், இதனால் விசா பிராசசிங் பாதிக்கப்படுமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க பெடரல் அரசின் செலவினங்களைச் சமாளிக்கக் கடன் பெற அனுமதித்திருப்பது தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாகவே அமெரிக்க பெடரல் அரசு முடங்கும் ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது மட்டும் நடந்தால் கிறிஸ்துமஸ் நெருங்கும் நிலையில், பல லட்சம் அமெரிக்கர்கள் தற்காலிகமாக வேலையிழக்கும் சூழல் ஏற்படும். அமெரிக்காவில் மட்டும் ஏன் இப்படியொரு விதி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 19ம் நூற்றாண்டு முதலே இந்த நிதி அமலில் இருக்கிறது. அமெரிக்க அரசு அதிக தொகையைச் செலவிடுவதைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்காகவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும். பொதுவாக ஓராண்டிற்குத் தேவையான நிதி மட்டுமே நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படும். அமெரிக்காவில் நிதியாண்டு என்பது அக்.1ம் தேதி தொடங்கும். இதனால், ஒவ்வொரு முறையும் அக்.1ம் தேதிக்கு முன்பு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அரசு முடங்கும் ஆபத்து ஏற்படும். இந்தாண்டு அதிபர் ரேஸ் மிக நெருக்கமாக இருந்ததால், தற்காலிக தீர்வாக டிச. 20 வரை செலவுகளைச் சமாளிக்கும் மசோதா கடந்த செப்.30ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகவே அமெரிக்கா நாளை முதல் முடங்கும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.. இதனால் உங்கள் விசா விண்ணப்பங்கள் தாமதம் அல்லது ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.. வெளியுறவுத் துறை என்பது அத்தியாவசிய துறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால்.. வெளியுறவுத் துறையின் விசா பிராசசிங் மையம் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், ஷட் டவுன் நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் இதில் தாமதங்கள் ஏற்படலாம். USCIS அதாவது US Citizenship and Immigration Services அமைப்பு தொடர்ந்து செயல்படும். இந்த யுஎஸ்சிஐஎஸ் அமைப்பு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இதுதான் அங்குக் குடியேற்றத்தை நிர்வகித்து வருகிறது. இது அமெரிக்க அரசின் நிதியைப் பெறாமல் யூசர் கட்டணத்தில் நிதியளிக்கப்படுவதால் இது தொடர்ந்து இயங்கும். இருப்பினும், இந்த அமைப்பிலேயே சில குறிப்பிட்ட பிரிவுகள் பெடரல் அரசின் நிதியை நம்பி இருந்தால் அவை இயங்காது. அதேபோல பெரும்பாலான குடியேற்றம் சார்ந்த செயல்முறைகளை மேற்பார்வையிடும் வெளிநாட்டுத் தொழிலாளர் சான்றிதழ் அலுவலகமும் செயல்படாது. இதனால் தொழிலாளர் விண்ணப்பங்கள் (LCAs), நிரந்தர வேலைவாய்ப்பு சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் புதிதாக ஏற்படாது. ஏற்கனவே ஏற்கப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்படாது. அதேபோல E-Verify சேவையும் பொதுமக்களுக்குக் கிடைக்காது. இதுதான் ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றார்.. நீங்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர் என்பதை அமெரிக்காவின் இந்த E-Verify அமைப்பு தான் சரிபார்க்கும். அது அந்நாட்டின் பெடரல் அரசு நிதி மூலம் இயங்குவதால் அந்த சேவை நமக்குக் கிடைக்காது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது H-1B, H-1B1, மற்றும் E-3 விசாக்கள் தான். இந்தியர்கள் தான் பொதுவாக இந்த விசாக்களில் அமெரிக்காவுக்கு அதிகம் செல்லும் நிலையில், இதனால் அதிக சிக்கல் அல்லது தாமதத்தை விசா கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆனால், பொதுவாக ஷட் டவுன் என்பது அதிகபட்சமாகவே கூட சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் பெரிய பிரச்சினை வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Related Post