சென்னை: ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப்போவதாக செய்திகள் அலையடிக்கின்றன. ஆனால், விஜய் அதனை ஏற்கமாட்டார் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ். விஜய்யின் இந்த முடிவுக்கான காரணங்களையும் நமக்கு அளித்துள்ள பேட்டியில் அடுக்குகிறார் ராஜகம்பீரன் அப்பாஸ்.
விசிகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. இதுகுறித்த கேள்விக்கு அவரே பதிலும் அளித்துள்ளார். அதில், இந்த யூகத்தை மறுக்காமல் மழுப்பலாகவே பதில் அளித்திருக்கிறார்.
"எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் செய்தியாளர்களை சந்தித்து என்ன முடிவு என்பதை அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. விஜய் பங்கேற்ற மேடை ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகியதற்கு காரணம் என்பதால் அவர் தவெகவில் இணையவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர் பேட்டி: ஆதவ் அர்ஜுனா எந்தக் கட்சியில் சேருவார்? அவரது அடுத்த கட்ட திட்டம் என்ன? ஆதவ் அர்ஜுனாவை விஜய் சேர்த்துக்கொள்வாரா என்பதெல்லாம் தமிழக அரசியல் களத்தில் பெரியளவில் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவுடன் அலசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ்.
நமக்கு அளித்துள்ள பேட்டியில் ராஜகம்பீரன் அப்பாஸ் கூறுகையில், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மேடையில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் எனப் பேசிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் முதலமைச்சராவதற்கு விஜய் உதவ முன்வர வேண்டும் என ஏன் பேசவில்லை? புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், திருமாவளவனின் ஆற்றலை போற்றி, அவரை முன்னிறுத்த வேண்டும் எனப் பேசவில்லை. அது என்ன தந்திரம்? அங்கும் விசிகவை துணை மாப்பிள்ளையாகத் தானே அழைத்துச் செல்லப் பார்க்கிறீர்கள்.
இன்னொரு வரலாற்றுப் பிழை: உண்மையிலேயே முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினை விட்டுவிட்டு, முதல்வர் கனவு காணும் - போன மாதம் கட்சி ஆரம்பித்த விஜய்யிடம் திருமாவளவன் போக வேண்டும் என்பது எவ்வளவு அர்த்தமற்ற பேச்சு? தமிழ்நாட்டிற்குள் பாஜக ஊடுருவுவதற்காக அவர்களால் அனுப்பப்பட்ட ஒரு நபர் தான் ஆதவ் அர்ஜுனா. அந்த வேலைத் திட்டம் பலிக்கவில்லை. மற்றபடி, விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனாவால் எந்தப் பலனும் இல்லை.
திருமாவளவன் என்ற செங்கலை உருவிவிட்டால் திமுக கூட்டணியை சரித்துவிடலாம் என்ற திட்டம் போட்டார்கள். மக்கள் நலக் கூட்டணி செய்த வரலாற்றுப் பிழை தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகவும், அதன் மூலம் பாஜக் கொள்ளைப்புற ஆட்சி செய்து வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டியதும். அதுபோன்ற இன்னொரு வரலாற்றுப் பிழையை செய்ய திருமாவளவன் தயாரில்லை.
அதிமுக உடன்: ஆதவ் அர்ஜுனா, விசிகவை அதிமுக கூட்டணியிலும் இணைக்க முயற்சித்துள்ளார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை அதிமுகவும் ஏற்கவில்லையே? செல்லூர் ராஜூ, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது தமிழ்நாட்டில் சாத்தியமே இல்லை எனக் கூறினாரே.. அதிமுகவின் அந்த நிலைப்பாடு பற்றி ஏன் ஆதவ் அர்ஜுனா பேசவில்லை? ஏன் ஒரு விமர்சனம் கூட வைக்கவே இல்லை?
திமுக என்ன சொல்கிறதோ அதையேதான் அதிமுகவும் சொல்கிறது. கடந்த காலங்களில் அதிமுக முக்குலத்தோர் கட்சி என்ற முத்திரை இருந்தது. இப்போது கவுண்டர் கட்சி என்ற நிலைக்கு திசைமாறிவிட்டது. முழுக்க முழுக்க இடைநிலைச் சாதி ஆதிக்கம் கொண்ட கட்சியாக மாறிவிட்ட அதிமுகவிடம், பட்டியலின மக்களுக்காகப் போராடும் திருமாவளவனுக்கு என்ன வேலை? அவரை ஏன் அதிமுக கூட்டணிக்கு கொண்டு செல்ல முற்பட்டார் ஆதவ் அர்ஜுனா?
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவனின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வாரா? சனாதன எதிர்ப்பை உதயநிதி ஸ்டாலினை போல பேசுவாரா? ஏன் ராமர் கோவில் திறப்புக்கு போகவில்லை எனக் கேட்டால் கால் வலிக்கிறது என்றுதானே சொன்னார் எடப்பாடி.. கருத்தியல் ரீதியாக ஏதாவது பேசி இருக்கிறாரா?
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை தவிர, அதிமுக எந்த கோட்பாட்டு அரசியலையும் முன்வைத்ததில்லை. திருமாவளவன் தனக்கு நேர்முரணான கருத்து கொண்ட அதிமுகவுடன் கூட்டணி சேர முடியாது, அதுமட்டுமின்றி இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் முக்கியமான இடத்தில் அவர் இருக்கிறார், அதனால் தான் அணி மாற வேண்டும் என்ற அவசியமில்லை என்ற தீர்க்கமான முடிவில் திருமாவளவன் இருக்கிறார்.
விஜய் ஆதவ் அர்ஜுனாவை சேர்க்க மாட்டார்: தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை திமுகவுக்கு நேர் எதிரான அரசியலை செய்யும் கட்சியாக அதிமுக இருக்கிறது, இப்போது விஜய் இருக்கிறார். இந்த 2 பேரில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். லாட்டரி அதிபரின் மருமகன் என்பதை கழித்துவிட்டால் ஆதவ் அர்ஜுனா ஒன்றுமே கிடையாது.
திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா செய்ததை எல்லாம் பார்த்தபிறகு, பெரிய அரசியல் கட்சிகள் ஆதவ் அர்ஜுனாவை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருக்கிறது. திருமாவளவனையே சூழ்ச்சி அரசியலில் சிக்க வைக்கப் பார்த்தவரை நேரடி அரசியலுக்குள் விட்டால் ஆட்டத்தைக் கலைத்துவிடுவாரா என விஜய்யே பயப்படுவார்.
புஸ்ஸி ஆனந்த் சூசகம்: இப்போதுதான் அரசியலின் தொடக்க நிலையில் இருக்கும் விஜய், ஆதவ் அர்ஜுனாவை சேர்க்கமாட்டார். அதற்கேற்ப தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் "நாங்கள் கட்சியில் நீண்ட நாள் இருப்பவர்களுக்குத்தான் பதவி கொடுப்போம். யார் அன்று முதல் இன்று வரை சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்கு தான் பதவி வழங்கப்படும். பெரிய கார் வைத்திருந்தால் எல்லாம் பதவி கிடைக்காது" என சூசகமாகவும் சொல்கிறார்." எனக் கூறியுள்ளார்.