தி நகர் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணியில் புழு மிதந்ததாக கொதித்த வாடிக்கையாளர்.. என்ன நடந்தது?

post-img
சென்னை: சென்னை திநகர் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் வாடிக்கையாளர் சாப்பிட்ட சிக்கன் பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு இருந்ததாக புகார் எழுந்த காரணத்தால் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடையில் சோதனை நடத்தி பிரியாணியை கட்டப்பையில் எடுத்து சென்றனர். கட்டப்பையில் பிரியாணியை ஆட்டோவில் எடுத்துக்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை, திநகர் உள்பட பல்வேறு இடங்களிலும், கோவையில் ஓரிடத்தில் இருக்கிறது எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி . இந்த கடை சென்னையில் மிகவும் பிரபலமான பிரியாணி கடைகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக திநகர் துரைசாமி மேம்பாலம் அருகே மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள எஸ்.எஸ் ஹைதரபாத் கடையில் பிரியாணி வாங்க கூட்டம் எப்போதுமே அலைமோதும். அதே போல இந்த கிளையில் அண்மையில் மாலையில் படுஜோராக வியாபாரம் நடந்து வந்த வேளையில், அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சத்ய பிரகாஷ் மற்றும் நிபி நெல்சன் ஆகியோர் சிக்கன் பிரியாணி மற்றும் கிரில் சிக்கனை ஆர்டர் செய்திருக்கிறார்கள். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த போது அந்த உணவில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அருகில் உணவை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் என அனைவரும் பிரியாணி கடை ஊழியர்களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உணவில் புழு இருந்தது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் சம்பந்தப்பட்ட எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு வந்து சுமார் 3 மணி நேரமாக அதன் கிச்சன் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, வாடிக்கையாளர் புழு இருந்ததாக கூறப்பட்ட உணவை சீலிட்டு ஆய்வுக்காக கட்டப்பையில் போட்டு ஆட்டோவில் கொண்டு சென்றனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதாசிவம், "உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் கடைக்கு வந்து சம்பந்தப்பட்ட உணவை பறிமுதல் செய்து ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளோம், தற்காலிகமாக கடையை மூட கூறி நோட்டீஸ் கொடுத்துள்ளோம். கடையை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்றார் பிரியாணியில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக வாடிக்கையாளருக்கும் கடை நிர்வாகத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கொடுங்கையூரில் செயல்படும் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டு வாந்தி மயக்கம் அடைந்ததாக புகார் எழுந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அந்த கடையை தற்காலிகமாக சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பிரியாணி தயாரிக்கும் கூடத்திலும் சோதனை மேற்கொண்டனர் . இப்போது மேற்குமாம்பலம் கடையில் புழு பிரச்சனை எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post