கர்நாடகா பெலகாவி தனி யூனியன் பிரதேசம் தான்..எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் உத்தவ் தாக்கரே மகன்!

post-img

மும்பை: கர்நாடகா மாநில எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கக் கூடிய பெலகாவி (பெல்காம்) பகுதியை அம்மாநிலத்தில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனுமாகிய ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார். பெலகாவி யூனியன் பிரதேச கோரிக்கையை வலியுறுத்தி மராத்திய அமைப்புகள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக ஆதித்ய தாக்கரே குரல் கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் இன்று பெலகாவியில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மராத்தி மொழி பேசுகிற மக்கள் கணிசமாக உள்ளனர். இதனால் கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே எல்லை மோதல்கள், இன மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால்தான் பெங்களூரில் மட்டுமல்லாமல் பெலகாவியிலும் சட்டசபை கூட்டத்தை கர்நாடகா அரசு நடத்தி வருகிறது.

பெலகாவியில் உள்ள 814 கிராமங்கள் தங்களது மாநிலத்துக்கு சொந்தமானது என்பது மகாராஷ்டிராவின் உரிமைக் குரல். பெலகாவி, கார்வார், நிபானி, பிதார் ஆகியவற்றை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது அம்மாநிலத்தின் நீண்டகால குரல்.
மேலும் மராத்தியர்களின் மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி (Maharashtra Ekikaran Samiti) உள்ளிட்ட அமைப்பினரோ பெலகாவியை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான போராட்டங்களுக்கு மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று கர்நாடகா மாநில சட்டசபை குளிர்கால கூட்டம் பெலகாவியில் நடைபெற்றது. கர்நாடகா சட்டசபை கூட்டத் தொடர் நடை பெறும் நிலையில் பெலகாவி தனி யூனியன் பிரதேச கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி உள்ளிட்ட மராத்திய அமைப்புகள், சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தன. ஆனால் கர்நாடகா மாநில் போலீசார் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.

இது தொடர்பாக மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மகாராஷ்டிராவ்வில் புதிய ஆட்சி அமைக்கும் கொண்டாட்டங்களில் ஆட்சியாளர்கள் இருக்கின்றன. ஆனால் எல்லையில் பெல்காமில் (பெலகாவி) மராத்தி மொழி பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை கர்நாடகா அரசு பறித்துக் கொண்டிருக்கிறது; மராத்தி மொழி பேசும் மக்களின் உரிமைகளை கர்நாடகா அரசு பறித்துக் கொண்டிருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது; பெலகாவியை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.

Related Post