உதயநிதி விவகாரத்தில் கைது.. ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது புதிய வழக்கு! பாய்ந்தது பெண் வன்கொடுமை சட்டம்

post-img
சென்னை: பெண் வழக்கறிஞரை வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டு கைதாகி உள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் கோவில் விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பேசி வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார். அதோடு திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் ஜீயர்கள் பற்றியும் அவர் கூறும் தகவல்கள் விவாதமாகும். இதனால் அடிக்கடி ரங்கராஜன் நரசிம்மன் பெயர் சர்ச்சைகளிலும் அடிபடும். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு அவர் புதிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும், 3 ஜீயர்களையும் தொடர்புப்படுத்தி அவர் பேசும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய தகவல் தான் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரின் போில் கடந்த 15ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர்.ஸ்ரீரங்கம் சென்று வீட்டில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை போலீசார் கைது செய்து வாகனத்தில் சென்னை அழைத்து சென்றனர். இந்நிலையில் தான் தற்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரங்கராஜன் நரசிம்மன் இதற்கு முன்பு பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறான கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரங்கராஜன் நரசிம்மன் மீதுபெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியை, ஜீயர்களுடன் தொடர்புப்படுத்தி பேசிய வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மனுக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ரங்கராஜன் நரசிம்மனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நேற்று போலீசார் தள்ளுபடி செய்தனர். இதனால் விரைவில் ரங்கராஜன் நரசிம்மன் ஜாமீனில் வெளியே வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தற்போது புதிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ரங்கராஜன் நரசிம்மனுக்கு சிக்கல் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Post