டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கடும் கண்டனத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்கியதில் முழு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவிலஸ்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், பாலாஜி சீனிவாசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அபய் ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் மாநில அரசு என்ன சொல்ல வருகிறது.
கடந்த முறை பதில் சொல்கிறோம் என கூறியதால்தான் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால் தற்போது வரை தமிழக அரசு பதில் தரவில்லை. நோட்டீஸ் வேண்டாம் என மாநில அரசின் உத்தரவாதம் அடிப்படையில் உத்தரவை மாற்றினோம்.
நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்புகிறோம். செந்தில் பாலாஜி வழக்கில் நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனி விஷயம். இந்த பண மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உள்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் பிறப்பித்து பதில் தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு பதவிக்காலத்தில் போக்குவரத்து துறையில் பல்வேறு பதவிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத் துறையும் தனி வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார்.
பல முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அவருடைய தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருப்பதாக கூறியும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இந்த ஜாமீன் கிடைத்த ஓரிரு நாளில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவர் ஏற்கெனவே வைத்திருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பலர் கண்டித்தனர். ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு அவசர அவசரமாக அமைச்சர் பதவி வழங்க வேண்டிய அவசியம் என்ன என பலர் கேள்வி எழுப்பினர்.
ஏற்கெனவே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி ஓகா, "பிணை வழங்கியதற்கு அடுத்த நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இணைந்தது ஏற்க முடியவில்லை. அவர் அமைச்சரானதால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் அஞ்சுவர் என நீதிபதி காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.