சென்னை கூடுவாஞ்சேரி காரணைபுதுச்சேரி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது அவர்கள் போலீஸார் மீது மோதுவது போல் வந்தனர்.
எனினும் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தின் போது போலீஸாரை அரிவாளால் வெட்டுவதற்கு அந்த காரில் இருந்த கும்பல் முயற்சித்தது. அதில் உதவி ஆயவாளர் சிவகுருநாதன் கையில் காயம் ஏற்பட்டது. அவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் ஆய்வாளரை வெட்ட முயன்ற போது அவர் தலையை குனிந்துவிட்டதால் அவரது தொப்பியில் வெட்டு பட்டது.
இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்த போது இரு ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். மற்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இறந்த ரவுடிகள் இருவர் மீதும் சரித்திர பதிவு வழக்கு உள்ளது. இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் எதற்காக போலீஸாரை பார்த்ததும் தாக்க முயற்சித்தனர். ஏதேனும் சதி திட்டத்துடன் சுற்றித் திரிந்தனரா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற இருவர் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.