டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகிப்பார். வருவாய் துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா யார் என்று இங்கு பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா வருவாய் துறை செயலாளராக உள்ளார்.அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகிப்பார்.
1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். வருவாய் மற்றும் வரி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் படித்தவர். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கையில் முதுகலை பட்டம் முடித்துள்ளார்.
சஞ்சய் மல்ஹோத்ரா பதவிக்காலம் வரும் 11 ஆம் தேதி தொடங்கும். அவரது பதவிக்காலம் வரும் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி முடிவடைய உள்ளது. 33 ஆண்டு கால பணி அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். நிதி, மின்சாரம், வரித்துறை, தகவல் தொழில் நுட்பம், சுரங்கம் என பல முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு உண்டு.
இதற்கு முன்பாக நிதித்துறையில் நிதி சேவைகள் துறையின் செயலாளராக பதவி வகித்தார். மாநில மற்றும் மத்திய அரசின் தூறைகளில் நிதி மற்றும் வரி விதிப்பில் பரந்த அனுபவம் பெற்றவர். தற்போது அவர் வகித்து வரும் பொறுப்பில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி விதிப்பு விவகாரத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் திடீர் விலகலுக்கு பிறகு சக்திகாந்த தாஸ் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
வரும் 11 ஆம் தேதியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், சக்தி காந்த தாஸிற்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாமல் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage