கோவை: 2023 - 2024 ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிக வருமானத்தை ஈட்டும் ரயில் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் 34 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரூ. 345 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரம் வருமானத்தையும் ஈட்டியுள்ளது.
உலக அளவில் இந்திய ரயில்வே நான்காவது பெரிய ரயில்வேயாகும். கோடிக்கணக்கான மக்கள் இந்திய ரயில்களில் தினந்தோறும் பயணங்களை செய்து வருகின்றனர். பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்து சேவையில் இந்திய ரயில்வே முக்கியப் பங்காற்றி வருகிறது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.
தொலைதூரப் பகுதிகளுக்கு விரைவாகவும், குறைந்த செலவிலும் செல்ல பொதுமக்களின் முதல் தேர்வாக ரயில் போக்குவரத்தே உள்ளது. இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் மூலமாக ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், உணவகங்கள், நடைமேடை டிக்கெட்டுகள், விளம்பரம், காத்திருப்பு அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை என பல சேவைகளின் மூலமாக ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.
அதேபோல, இந்திய ரயில் நிலையங்களில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் ஒன்றாகும். அந்த வகையில், அகில இந்திய அளவில் 2023- 2024 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டித் தரும் ரயில் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் 34 வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி ரயில் நிலையம் முதலிடத்தையும், சென்னை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திய நாட்டில் உள்ள ரயில்களில் மூலமாக 2023 முதல் 2024 வரை பெறப்பட்ட வருவாய், சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதில் பெற்ற வருவாய் குறித்த சென்னை ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஆர்டிஐ - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு, பயணிகள் இயக்கத்தின் மூலம் ரூ. 2.56 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. டெல்லி ரயில் நிலையம் ரூ. 3,337 கோடியே 66 லட்சத்து 47 ஆயிரம் வருமானத்தை ஈட்டி இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹவுரா ரயில் நிலையம் ரூ. 1,692 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரம் வருமானத்தை ஈட்டி, 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ. 1,299 கோடியே 31லட்சத்து 43 ஆயிரம் வருமானம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோவை ரயில் நிலையம் ரூ.345 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரம் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம், இந்திய அளவில் 34 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல, அதிக வருமானம் ஈட்டித் தரும் ரயில் நிலையங்களில் தமிழகம், கேரள மாநிலத்தில் உள்ள நகரங்களைக் கொண்ட தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களில் இதில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சென்னை எழும்பூா் ரயில் நிலையம் 16 வது இடத்தையும், திருவனந்தபுரம் ரயில் நிலையம் 45 வது இடத்தையும், தாம்பரம் ரயில் நிலையம் 54வது இடத்தையும், எா்ணாகுளம் ரயில் நிலையம் 55 வது இடத்தையும், மதுரை ரயில் நிலையம் 61வது இடத்தையும், கோழிக்கோடு ரயில் நிலையம் 70வது இடத்தையும், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 78வது இடத்தையும், திருச்சூா் ரயில் நிலையம் 79 வது இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல, காட்பாடி ரயில் நிலையம் 86வது இடத்தையும், எா்ணாகுளம் ரயில் நிலையம் 91வது இடத்தையும், திருநெல்வேலி ரயில் நிலையம் 92வது இடத்தையும், சேலம் ரயில் நிலையம் 98 வது, கண்ணூா் 100 வது இடத்தையும் பிடித்துள்ளது.