கிறிஸ்துமஸுக்கு கன்னியாகுமரி போறீங்களா! சிறப்பு ரயில் இதோ.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

post-img
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த பண்டிகைக்காக கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாரம்தோறும் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் (06039/06040) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிச.24 மற்றும் டிச.31 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சென்னை தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. இது நள்ளிரவு 12.35 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும். அதே நாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்று சேரும். வழித்தடத்தை பொறுத்தவரை தாம்பரம்-செங்கல்பட்டு-மேல்மருவத்தூர்-விழுப்புரம்-விருதாச்சலம்-திருச்சி-திண்டுக்கல்-மதுரை-விருதுநகர்-சாத்தூர்-கோவில்பட்டி-திருநெல்வேலி-வள்ளியூர்-நாகர்கோவில்-கன்னியாகுமரி என்கிற வழியில் பயணிக்கிறது. மறுபுறம் இதேபோல டிச.25, ஜனவரி.01ம் தேதி இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. தாம்பரம் தவிர, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது டிச.23 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்படுகிறது. வழித்தடத்தை பொறுத்தவரை, சென்ட்ரல்-பெரம்பூர்-திருவள்ளூர்-அரக்கோணம்-காட்பாடி-ஜோலார்பேட்டை-சேலம்-ஈரோடு-திருப்பூர்-பொடனூர்-பாலக்காடு-திரிச்சூர்-ஆலுவா-எர்ணாக்குளம் டவுன்-கோட்டையம்-செங்கனசேரி-திருவல்லா-செங்கனூர்-மாவேளிக்கரா-காயன்குளம்-கொல்லம்-கொச்சுவேலி என பயணிக்கிறது. அங்கிருந்து டிச.24 மற்றும் டிச.31 ஆகிய தேதிகளில் இதேபோல சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் ரயில்வே: சர்வதேச அளவில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களில் இந்தியன் ரயில்வே மிக முக்கியமானதாகும். நாள்தோறும் இந்தியன் ரயில்வே சுமார் 8000 ரயில்களை இயக்குகிறது. இதில் 6,268 ரயில்கள் பயணிகள் ரயில்களாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 3-20 கோடி பயணிகளை இந்த ரயில்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் சமீப நாட்களாக பயணிகள் ரயில்கள் தொடர்ந்து விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து ஆந்திராவில், தமிழ்நாட்டில் என பல மாநிலங்களில் ரயில் விபத்து நடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களில் ரயில்வே துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post