நடிகர் விஜய், காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து தொகுதிகளிலும் மாலை நேர பயிலகம் தொடங்க உத்தரவிட்ட நிலையில், நேற்று 14 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் அடுத்த மூவ் குறித்துப் பேசியுள்ளார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து விஜய் பாராட்டியும் உள்ளார். இதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் விஜய் உத்தரவின்படி சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களின் பிறந்த நாளின் போது அவர்களது சிலைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கடந்த மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 17ஆம் தேதி 10, 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய்.
xஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் மாலை நேர பயிலகம் அமைக்க விஜய் உத்தரவிட்டார். அதன்படி, பல இடங்களில் நேற்று பயிலகம் தொடங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தை தொகுதி வாரியாக வலுப்படுத்தி, படிப்படியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை அரசியலுக்கு தயார்படுத்தியும் வருகிறார் விஜய்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் பயிலகத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 14 இடங்களில் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். காமராஜர் பிறந்தநாளில் விஜய் சொல்லுக்கிணங்க இதனை தொடங்கியுள்ளோம். இதில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து விஜய்யுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் பெண்கள், இந்த விஜய் பயிலகத்தில் ஆசிரியர்களாக பணியாற்ற உள்ளனர். நாங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறோம் என எங்கள் மாவட்ட தலைவர்களிடம் 302 பேர் தன்னார்வத்துடன் விண்ணப்பம் அளித்துள்ளனர். தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை விஜய் பயிலகத்தில் டியூஷன் நடத்தப்படும்.
கடலூரில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இந்த பயிலகம் திட்டம் தொடங்கப்பட்டது. அங்கு படித்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதை விஜய் கவனத்திற்கு கொண்டு சென்றதும் தமிழ்நாடு முழுக்க பயிலகங்களை தொடங்க உத்தரவிட்டார். விஜய் பயிலகத்தில் ஆலோசனை பெட்டி இருக்கும். அதில் அனைவரும் கருத்துகளை தெரிவிக்கலாம், அதன்படி அடுத்தடுத்த செயல்பாடுகள் இருக்கும் என்றார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிப்பதை தவிர்த்தார். மேலும், விஜய்யின் திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.