புதுடெல்லியில் கெஜ்ரிவால் போட்டி.. 70 தொகுதிகளுக்கும் தனித்து வேட்பாளர்களை அறிவித்த ஆம்ஆத்மி

post-img
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் கடைசிகட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அந்த கட்சி வெளியிட்டது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி உள்ளார். இந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இதனால் 2025 பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தீவிரமாக களப்பணியை மேற்கொண்டு வருகின்றன. ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இதனால் டெல்லியில் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்க உள்ளன. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளை வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சி சார்பில் தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் என்பது வெளியிடப்பட்டு வந்தது. மொத்தம் 3 கட்டங்களாக 32 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்று 4வது மற்றும் கடைசி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 38 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இதன்மூலம் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து முடித்துவிட்டது. இன்று வெளியான கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் முதல்வராக உள்ள அதிஷி கல்காஜி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷில் போட்டியிடுகிறார். இன்று காலையில் பாஜகவில் இருந்து ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்த கவுன்சிலர் குசும் லதாவின் கணவர் ரமேஷ் பெல்வானுக்கு கஸ்தூரி பா நகரில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. முழுமையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛இன்றுடன் ஆம்ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் கட்சி முழு உறுதியுடன் போட்டியிடுகிறது. பாஜகவை இங்கு எங்கும் காணவில்லை. அந்த கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை. பாஜகவுக்கு கட்சியில் குழு இல்லை. திட்டமிடல் இல்லை. டெல்லியை பற்றிய பார்வை என்பது இல்லை. அவர்களிடம் இருப்பது ஒரேயொரு முழக்கம் தான். கெஜ்ரிவாலை அகற்ற வேண்டும் என்ற முழகத்தை தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று அவர்களிடம் (பாஜக) கேட்டால், அவர்களின் ஒரே பதில்-'கெஜ்ரிவாலை நாங்கள் அதிகம் விமர்சித்தோம் என்று மட்டுமே சொல்வார்கள். அதேவேளையில் ஆம்ஆத்மி கட்சியிடம் டெல்லி குறித்த தொலைநோக்கு பார்வை, பெரிய திட்டம், அதனை செயல்படுத்துவதற்கான குழு, அணி எங்களிடம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளின் நீண்ட பட்டியலும் எங்களிடம் உள்ளது. டெல்லி மக்கள் அவர்களுக்காக வேலை செய்பவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள். அவதூறு பரப்பி வருவோரை (மறைமுகமாக பாஜகவை சொல்கிறார்) புறக்கணிப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.

Related Post