"மாற்றானின் கால் பிடித்து தன்மானம் கெட்டு வாழ்கிறாயே.." ஆதவ் அர்ஜுனாவுக்கு வன்னியரசு பதில்

post-img

சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை 6 மாதங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தன் மீதான நடவடிக்கை குறித்து ஆதவ் அர்ஜுனா சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதில் அவர் திருமாவின் கவிதையையும் குறிப்பிட்டு இருந்த நிலையில், அந்த கவிதை வரிகளைக் கொண்டே வன்னியரசு பதில் அளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிகவின் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
சர்ச்சை பேச்சு: குறிப்பாக அப்போது ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் இங்குப் பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்படக் கூடாது என்றும் கூறியிருந்தார். மேலும், கருத்தியல் தலைவர்தான் தமிழகத்தில் ஆள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது கருத்துகள் கூட்டணிக் கட்சியான திமுகவை தாக்கும் வகையில் இருந்ததாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
கூட்டணியில் இருந்து கொண்டு எப்படி இதுபோல பேசலாம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தனக்கும் ஆதவ் அர்ஜுனா பேச்சில் உடன்பாடு இல்லை என்றும் உயர் மட்டக்குழுவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமா கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா: இந்தச் சூழலில் இன்று மாலை ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்று குறிப்பிட்ட அவர், தன்னை இடைநீக்கம் செய்த நடவடிக்கையைக் காலத்தின் கரங்களில் ஒப்படைப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.. மேலும், அந்த பதிவில் ஆதவ் அர்ஜுனா, தானாக விடியுமென்று தவறாக நம்பாதே என்று தொடங்கும் திருமாவளவனின் கவிதையையும் குறிப்பிட்டு இருந்தார்.
வன்னியரசு பதில்: இதற்கிடையே ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிக துணைப் பொது செயலாளர்களில் ஒருவரான வன்னியரசுபதிலளித்துள்ளார். திருமாவளவனின் அந்த கவிதையையே சற்று மாற்றிப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:
விடியாதோ
வாழ்க்கையென
விம்பி துடித்தபடி
விவரம் அறியாமல்- தன்
விழி கலங்கி நிற்பவனே!
புலராதோ
வாழ்க்கையென
பொற்கனவு கண்டபடி
பொழுதெல்லாம்
பாடுபட்டு- தினம்
புலம்பி தவிப்பவனே!
அடித்தாலும்
உதைத்தாலும்
அவமானம்
செய்தாலும்
ஆத்திரங்கொண்டு எழாமல்
மனிதன் என்பதே மறந்து
மாற்றானின்
கால் பிடித்து
தன்மானம் கெட்டு
வாழ்கிறாயே!
தானாக விடியுமென்று
தவறாக நம்பாதே
வீணாக மனம் நொந்து
எல்லாம் விதியென்று
வெம்பாதே
நீயாக முன் வந்து
நெருப்பாக விழி சிவந்து
நிலையாக போர் புரிந்தால் -உனக்கு
நிச்சயமாய் விடியலுமுண்டு!
நெஞ்சில் துணிச்சலின்றி
அஞ்சி ஒடுங்கி
கஞ்சி குடிப்பதற்கே
கெஞ்சி கிடக்கிறாயே!
திருமாவளவனின் கவிதையை திருத்தம் செய்து அனுப்பியுள்ளேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Post