பாமக நிறுவனர் ராமதாஸ் பாணியில் தேர்தல் அரசியலில் இருந்து விலகும் தவாக தலைவர் வேல்முருகன்?

post-img
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேர்தல்களில் போட்டியிடுவதில்லை; அதேபோல பாமகவில் இருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நடத்தி வரும் அதன் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சியினரை மட்டும் போடியிட வைக்க ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களில் முதன்மையான இருந்தவர் வேல்முருகன். பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார் வேல்முருகன். இருந்த போதும் வன்னியர் உள் இடஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அண்மைக்காலமாக திமுக அரசை பகிரங்கமாக விமர்சித்தும் வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் தமக்கு மரியாதை தரப்படுவதில்லை; அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக கூட பேச மறுக்கின்றனர். துணை முதல்வர் தொகுதிக்கு வருகை ததந்த போது கூட தமக்கு தகவல் தெரிவிக்கவில்லை என தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக கடும் குரலில் பேசி வருகிறார் வேல்முருகன். மேலும் தமது எம்.ல்.ஏ. பதவியை வேல்முருகன் ராஜினாமா செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அப்படி வேல்முருகன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் பண்ருட்டி தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள நேரிடும்; அந்த தேர்தலில் திமுக அமைச்சர்கள் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்க முடியாத நிலைமைதான் உள்ளது எனவும் மிரட்டல் விடுத்திருந்தார் வேல்முருகன். இதனிடையே தமது தாய் கட்சியான பாமக அழைத்தால் சமூக நீதிப் போராட்டங்களில் இணைந்து கொள்ளவும் தயார் எனவும் வேல்முருகன் கூறி வருகிறார். இந்த நிலையில், பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் போல தேர்தலில் போட்டியிடாமல் கட்சியினரை மட்டுமே தேர்தலில் நிறுத்துவது என்கிற முடிவை வேல்முருகன் ஆலோசித்து வருகிறாராம். இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், நான் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டேன். ஏன் வேல்முருகன் மட்டுமே எம்.எல்.ஏ.வாக வேண்டுமா? தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் எண்ணற்ற தமிழ்த் தேசியப் போராளிகள் இணைந்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போல நானும் மற்றவர்களுக்கு வழிவிடலாம் என ஆலோசித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவிக்கிற கருத்துகள் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Related Post