ஆவின் பால் விலை ஏற்றமா?.. எல்லாம் கட்டுக்கதை.. மனதில் பால் வார்த்த அமைச்சர்!

post-img

சென்னை: ஆவின் பாலுக்கான விற்பனை விலையை கூட்டுவோம் என்ற தகவல் வெறும் கட்டுக்கதைதான் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசு ஈடுபடவில்லை என்றும் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உண்டு. தனியார் நெய், வெண்ணெயை விட சுவை கூடுதலாகவும் விலை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.
சந்தையில் தனியார் நிறுவனங்களின் பால் விலையை ஒப்பிடும்போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், பாலுக்கான விற்பனை விலையை கூட்டுவோம் என்ற தகவல் வெறும் கட்டுக்கதைதான். பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசு ஈடுபடவில்லை என்று விளக்கம் அளித்தார்.
விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்? மக்கள் சொல்வது என்ன! சர்வே முடிவை சமர்ப்பித்த ஆவின் நிறுவனம்
ஆவினில் பாலின் அளவு குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு, "நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பால் பாக்கெட்டுகளை ஆவின் தயாரிக்கிறது. எங்கோ ஒருசில இடங்களில் நடப்பதை வைத்து ஒருசிலர் சமூக வலைதளங்களில் பூதாகரமாக்கிவிடுகிறார்கள். ஆவினைப் பொறுத்தவரை அளவிலும், தரத்திலும் நாங்கள் எந்த சமரசமும் செய்வதில்லை. எங்கேயாவது ஒரு இடத்தில் பிரச்னை வந்திருக்கலாம். அங்கும் நாங்கள் ஆய்வு செய்து பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
தனியார் நிறுவனங்களின் பாலின் விலையை ஏற்றாமல் அதன் அளவை குறைத்து அதே விலையில் விற்பதாக கூறுகின்றனர். இதனை இந்திய உணவு மற்றும் தர ஆணையம் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இதுபற்றி தகவல் அனுப்பியுள்ளோம். தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை வைத்து பால் விற்கிறார்கள். ஆகவே, ஆவின் பொருட்களை பொதுமக்கள் கண்டிப்பாக நம்பலாம் என்றும் கூறினார்.
சந்தையில் ஒர் லிட்டர் நெய் விலை 960 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், ஆனால் ஆவினில் விலை ஏற்றிய பிறகும் 700 ரூபாய்க்கே ஒரு லிட்டர் நெய் விற்பனையாகிறது என்றும் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக நெய் விலை உயர்வை கையிலெடுப்பார்கள். பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஆவின் எப்போதும் செயல்படாது என்றும் கூறி மக்களின் மனதில் பால் வார்த்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

 

Related Post