டிரைவர் இல்லாத சென்னை மெட்ரோ ரயிலுக்கு ரூ.3657 கோடியில் ஒப்பந்தம்! முதல் ரயில் எப்போ வருது தெரியுமா?

post-img
சென்னை: சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க, ரூபாய் 3,657 கோடிக்கு BEML நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டது. இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள பெரும்பாலும் மெட்ரோ ரயில் சேவைகளையே தேர்தெடுக்கின்றனர். பண்டிகை காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களிலும், மக்கள் நினைத்த இடத்திற்கு விரைவாகச் செல்ல சூப்பரான சாய்ஸாக சென்னை மெட்ரோ ரயில் சேவை விளங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.11.2024 அன்று BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் BEML நிறுவனத்தின் இயக்குநர் (இரயில் மற்றும்மெட்ரோ) ராஜீவ் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில்), இணை பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் BEML நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ இரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்று ஒப்பந்தங்களின் வரிசையில் இரண்டாவது ஒப்பந்தமாகும். முன்னதாக, முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, மேலும் முன்மாதிரி இரயில் ஏற்கனவே சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது.

Related Post