கோவை: கோவை புறநகர் பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று நாடு முழுவதும் பிரபலமடைந்தவர் கமலாத்தாள் பாட்டி. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்தன. இந்நிலையில் மகேந்திரா குழுமம் அவருக்கு கட்டிக் கொடுத்த வீட்டின் சமீபத்திய நிலை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள வடிவேம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 90 வயதைக் கடந்த கமலாத்தாள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இட்லி வியாபாராம் செய்து வருகிறார். தொடக்கத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் தமிழ்நாடு முழுவதும் கமலாத்தாள் வைரலானார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா வைரஸ் போன்ற காரணங்களால் விலைவாசி தாறுமாறாக எகியுள்ளது. ஆனால், இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியலும் கமலா பாட்டி 1 ரூபாய்க்குதான் இட்லி விற்கிறார். மேலும் தனது கடைசி மூச்சு இருக்கும்வரை 1 ரூபாய்க்குதான் இட்லி கொடுப்பேன் என்று கொள்கை முடிவு எடுத்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் அந்த ஊரில் பலரது பசியை போக்கியது கமலாத்தாள் பாட்டி தான். யாரின் உதவியும் இல்லாமல் கமலாத்தாள் தனி ஒருவராக செய்யும் இந்த சேவை இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. பல்வேறு தரப்பில் இருந்தும் கமலாத்தாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீண்டது.
கேஸ் ஸ்டவ், சிலிண்டர், க்ரைண்டர், மிக்ஸி, அரிசி, பருப்பு ஆகியவற்றில் தொடங்கி நிலம், வீடு என்று பல உதவிகள் செய்யப்பட்டன. மகேந்திரா குழுத்தின் ஆனந்த் மகேந்திரா கமலாத்தாள் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கமலாத்தாள் பாட்டியை சந்தித்தனர்.
வேலுமணி தரப்பில் கமலாத்தாள் பாட்டிக்கு 2 சென்ட் நிலம் வாங்கி பாட்டியின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் மகேந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் சார்பில் கமலாத்தாள் பாட்டிக்கு நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்து வீடு மற்றும் கடை கட்டிக் கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் கமலாத்தாள் பாட்டி வீட்டுக்கு சென்ற யூடியூபர்கள் மகேந்திரா குழுமம் வழங்கிய வீட்டின் தற்போதைய நிலை குறித்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழையில் மேல் தளம் ஓதமாகி, மழை பெய்யும் போது தண்ணீரும் ஒழுகி வந்ததாம்.
நாளடைவில் ஓதம் பெரிதாகி, அங்கு மாட்டப்பட்டிருந்த ஃபேன் கழன்று கீழே விழுந்துவிட்டதாம். இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் பாட்டி அந்த இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக ஃபேன் விழுகும்போது பாட்டி அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டாராம். இதனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகேந்திரா குழுமம் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்து மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன. “வீடு கட்டி கொடுத்தது நல்ல விஷயம் தான். ஆனால் அதை சற்று தரமாகவும், பாதுகாப்பானதாகவும் செய்திருக்கலாமே.” என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.