ஓரின சேர்க்கை பெண் ஜோடி சேர்ந்து வாழலாம்.. பெற்றோர் தலையிடக்கூடாது.. ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு

post-img
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஓரின சேர்க்கை பெண் ஜோடி சேர்ந்து வாழ ஆந்திரா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. 18 வயது பூர்த்தியான பெண் தனக்கு பிடித்தவர்களுடன் வாழவும் உரிமை உள்ளதும் என்றும், பெற்றோர் தலையிடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரின சேர்க்கை பெண் ஜோடியின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாத என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த பெண்ணும், லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் ஓரின சேர்க்கை ஆர்வலர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விஜயவாடாவில் லட்சுமிவின் பெற்றோர் வீட்டில் ஓராண்டாக சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம், லலிதாவை அவருடைய பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, லலிதாவை காணவில்லை என்று விஜயவாடா போலீசில் லட்சுமி புகார் கொடுத்தார். பெற்றோர் வீட்டில் லலிதா இருப்பதை போலீசார் கண்டுபிடித்து, அவரை மீட்டுள்ளனர். தான் 18 வயது பூர்த்தியானவள் என்றும், தனது துணையுடன் வாழ விரும்புவதாகவும் லலிதா போலீசாரிடம் கூறினார். ஆனாலும் இருவரையும் சேர்ந்து வாழ போலீசார் உடனடியாக அனுமதிக்கவில்லை.. லலிதாவை நல்வாழ்வு இல்லத்தில் போலீசார் 15 நாட்கள் தங்க வைத்துவிட்டார்கள். இந்த சூழலில் தன்னுடைய பெற்றோ துன்புறுத்துவதாக லலிதாவும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இந்த விவகாரத்தில் தலையிட்டார்கள். அதன் பிறகு லலிதா விஜயவாடாவுக்கு திரும்பி வந்தார். வேலைக்கு சென்றதுடன், லட்சுமிவையும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தாராம். இந்த நிலையில், லலிதாவை அவருடைய தந்தை மீண்டும் ஒரு வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, லட்சுமி, அமராவதியில் உள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தனது தோழி லலிதாவை ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த ஆட்கொணர்வு மனுவில், லலிதாவை நர்சிபட்டணத்தில் உள்ள வீட்டில் அவருடைய தந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த அமராவதியில் உள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரகுநந்தன் ராவ், மகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, லலிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதன்பேரில் விஜயவாடா போலீசார் லலிதாவை ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது லட்சுமிவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அதற்கு அனுமதித்தால், பெற்றோர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் லலிதா நீதிபதிகள் முன்னிலையில் கூறியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஓரின சேர்க்கை பெண் ஜோடியான லட்சுமி-லலிதா சேர்ந்து வாழ உரிமை இருப்பதாக கூறி, வழக்கை முடித்து வைத்தனர். 18 வயது பூர்த்தியான லலிதா, தனது துணையை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது என்றும், லட்சுமிவுடனான லலிதாவின் வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் தலையிடக்கூடாது என்றும் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். போலீசில் கொடுத்த புகாரை லலிதா வாபஸ் பெற விரும்புவதால், லலிதாவின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்றும் போலீசாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Post