ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகள் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வரும் டிவி 9 சார்பில் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முக்கிய முடிவுகள் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் TV9 Bharatvarsh, Pollstrat சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக் 63 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி அரியணை ஏற உள்ளது.
மாறாக தற்போது ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சி 31 முதல் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். இதன்மூலம் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியிடம் இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 2 முதல் 4 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என அந்த கட்சியினர் கூறி வரும் நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கி உள்ளன.