கோவை: விஜய்யின் 'லியோ' திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, கோவையில் உள்ள தியேட்டர் முன்பாக நடு ரோட்டில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து விஜய் ரசிகர்கள் அலப்பறை செய்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படத்தில் த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. சிறப்புக் காட்சி தொடர்பாக தொடர்ந்து பிரச்சனை நீடித்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.
'லியோ' பட ரிலீஸை ஒட்டி இன்று வழக்கம் போல், 'லியோ' திரைப்படம் வெளியான திரையரங்கங்கள் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில் சில இடங்களில் ரசிகர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவிலும் பட்டாசு வெடித்தும், கூட்டமாக கூடி ஆட்டம் போட்டும் அலப்பறை செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கோவையில் விஜய் ரசிகர்கள் நடு ரோட்டில் சுமார் 500 தேங்காய்களை உடைத்து ஆரவாரம் செய்தனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 100 தியேட்டர்களில் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியானது. முதல் காட்சி 9 மணிக்குத்தான் என்றாலும், அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து, மேள தாளங்கள் முழங்க, விஜய் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடித் தீர்த்தனர்.
கோவை கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் உள்ள தியேட்டரில் அதிகாலையே குவிந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளம் முழங்க, விஜய்யின் பேனர்களுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, சாலைக்கு வந்த ரசிகர்கள், தொடர்ச்சியாக சுமார் 500 தேங்காய்களை நடு ரோட்டில் உடைத்து அலப்பறை செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் வந்தனர். அவர்கள், அங்கு லியோ படத்தை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைத்தனர். தொடர்ந்து அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், அங்கு தேங்காயும் உடைத்தனர். இதேபோல் கோவையின் நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் பாலாபிஷேகம், தேங்காய் உடைப்பு வைபவங்கள் நடந்தன.
உடைந்த தேங்காய்கள் வண்டி டயர்களில் குத்தினால் பஞ்சர் ஆகும், அவசர வேலையாகச் செல்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள், எந்த ஒரு கொண்டாட்டத்தையும் நாகரிகமாக அடுத்தவர்களை பாதிக்காமல் கொண்டாட வேண்டும். இதுபோன்ற நபர்களின் செயல்களால் இவர்கள் கொண்டாட கூடிய நபருக்குத்தான் கெட்ட பெயர் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.