ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக, சிக்கடப்பள்ளி போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று (டிசம்பர் 24) காலை 11 மணிக்கு அல்லு அர்ஜுன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் PAN India படமாக கடந்த 5 ஆம் தேதி வெளியானது. புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தெலுங்கானா அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி 4 ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் ஸ்ரீ தேஜ் கோமா நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டதாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்த சிக்கடப்பள்ளி போலீசார், கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜுனை கைது செய்தனர். தெலுங்கானா ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியதால் மறு நாளே சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் சிக்கடப்பள்ளி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், நடிகர் அல்லு அர்ஜுன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் வீட்டிற்கு திங்கட்கிழமை சென்ற காவல்துறை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்தனர். அல்லு அர்ஜுன் அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை தெலுங்கானா மாநில அரசு மிகவும் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறது. தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசுகையில், “சந்தியா தியேட்டர் உள்ள பகுதி நிறைய ஹோட்டல்கள், தியேட்டர்கள் இருக்கும் பகுதி என்பதால், பாதுகாப்பு கருதி அங்கு வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் அங்கு சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் தெரிவித்த பிறகும், படத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்தப் பெண்ணின் மகனும் படுகாயமடைந்தார். அப்போதும் படம் முடியாமல் புறப்பட மாட்டேன் என மறுத்துள்ளார். காவல் துணை ஆணையர், நீங்கள் புறப்படாவிட்டால் கைது செய்வோம் எனக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்த பிறகுதான் அல்லு அர்ஜுன் புறப்பட்டார். அப்போதும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்?” எனக் காட்டமாகப் பேசினார் ரேவந்த் ரெட்டி.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், தன்னுடைய கேரக்டரை மோசமாக தாழ்த்தி பேசுவது வேதனை அளிக்கிறது என்றும், நான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் கூறினார். தன்னிடம் போலீசார் கூட்ட நெரிசல் குறித்து எதுவும் கூறவில்லை என்றும் அந்த பெண் உயிரிழந்தது மறுநாள் காலையில்தான் தனக்குத் தெரியவந்தது என்றும் தனது பெயருக்கு சிலர் களங்கம் கற்பிக்கின்றனர் என்றும் கூறினார்.
ஆனால், ஹைதராபாத் போலீசார் சம்பவம் நடந்த அன்று சந்தியா திரையரங்கில் பதிவான சிசிடிவி வீடியோவை ஹைதராபாத் போலீசார் வெளியிட்டனர். ரசிகை உயிரிழந்தது தெரிந்தும் கூட தியேட்டரில் அமர்ந்து அல்லு அர்ஜுன் படத்தை பார்த்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அல்லு அர்ஜுன் வீட்டில் சில போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.